பிரதமரின் செயலாளரின் நிதி அதிகாரத்தை தடுக்கும் பிரேரணை நிறைவேற்றம்


பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.Karu-Jayasuriya1

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர்.

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவால் இன்று காலை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போதே இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஆமோதித்து வழிமொழிந்தார்.

கடந்த 14ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைப்படி அமைச்சரவை கலைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதன்படி பாராளுமன்றம் பகிரங்க நிதியின் மீது பூரண கட்டுப்பாட்டை கொண்டிருப்பதால் பிரதமரின் செயலாளருக்கு குடியரசின் நிதியிலிருந்து எந்த செலவினத்தையும் மேற்கொள்வதற்கு அதிகாரமில்லை என்று தெரிவித்து இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது.

பிரேரணை சமர்பிக்கப்பட்டதன் பின்னர் அதன் மீதான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத அதேவேளை அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் அத்துரலிய ரத்ண தேரர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் குறித்த பிரேரணைக்கு வசந்த சேனநாயக்கவும் ஆதவராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Theneehead-1

   Vol:17                                                                                                                               30.11.2018