Theneehead-1

   Vol:17                                                                                                                               30.11.2018

மாகாணசபையின் தவறுகளும் ஆளுநரின் தலையீடும்

 -    கருணாகரன்


“மாகாண சபை நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரித்துள்ளது” என்ற முனல்கள் கேட்கத் தொடங்கி விட்டது. மாகாண நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு ஏற்றreginold-281018ுக் கொள்ளக் கூடியதல்ல என்பது நியாயமே. அதற்காக மாகாண நிர்வாகத்தைச் சீரழியவும் விடமுடியாதே. மாகாண நிர்வாகம் சரியாக இருந்திருக்குமாக இருந்தால் ஆளுநர் தலையீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. தவறுகளாக ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு யாரையும் குறைசொல்லிப் பயனில்லை. வேண்டுமென்றே ஆளுநர் தலையீடுகளைச் செய்கிறார், பாரபட்சமாக நடக்கிறார், அரசியல் உள்நோக்கத்தோடு செயற்படுகிறார் என்றால் அதை நாம் நிச்சயமாக எதிர்த்தே ஆக வேண்டும். இல்லையெனில் நல்லவற்றுக்காக ஆதரிப்பது தவிர்க்க முடியாதது.

கடந்த வாரம் வடமாகாணக் கல்வித்துறையில் மறைக்கப்பட்டிருந்த சில விடயங்கள் வெளியே தெரியவந்தன. முதலாவது, யாழ்ப்பாண நகரில் உள்ள இரண்டு சிறிய பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது. இதைப்போல யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி கல்வி வலயங்களில் தேவைக்கதிகமான ஆசிரியர்கள் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக புள்ளி விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இரண்டாவது, வன்னிப்பிரதேசப் பாடசாலைகளில் ஆசிரியர், அதிபர் பற்றாக்குறை என்பது. இதற்கு சுட்டிப்பான உதாரணம், “துணுக்காய் கல்வி வலயத்திற்கு 270 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.  வலயத்திலுள்ள 56 பாடசாலைகளில் நிரந்தர  அதிபர்கள் இல்லாமல் 31 பாடசாலைகள் இயங்குகின்றன. 8202 மாணவர்கள் கல்வி கற்கும் இந்த வலயத்தில் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறை என்பது தீராத தொடர் பிரச்சினையே. சேவையிலுள்ள ஆசிரியர்களில் அநேகர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்றவர்கள். இவர்களில் ஒரு தொகுதியினர் தொடர்ச்சியாகச் சீரான சேவையை வழங்க முடியாமலிருப்பது பெரிய நெருக்கடியாகும். இதனால் இந்தப் பிரதேச மாணவர்களின் கல்வித் தரம் சவாலாகவே இருக்கிறது. இதை மேம்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் உடனடியாகத் தேவை” என்று துணுக்காய்  வலயக்கல்விப் பணிப்பாளர் பி.ரவிச்சந்திரன் தெரிவித்திருப்பதாகும்.

இது தனியே துணுக்காய் கல்வி வலயத்திற்குரிய பிரச்சினை மட்டுமல்ல. வடக்கில் யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், மடு, மன்னார், வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு போன்ற ஏனைய கல்வி வலயங்களுக்குமுள்ள தொடர் பிரச்சினையாகும்.

இதனைக் கடந்த காலத்தில் வடமாகாணசபை (விக்கினேஸ்வரனின் நிர்வாகம்)  நிவர்த்தி செய்யவில்லை. வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்றி பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கும் வட மாகாணசபை (விக்கினேஸ்வரனின் நிர்வாகம்) வன்னிப்பிரதேசத்திற்கு இந்தளவு பாரபட்சம் காட்டியதும் பாராமுகமாக இருந்ததும் ஏன்? இதனால்தான் ஆளுநர் இப்போது இந்த விசயத்தில் தலையீடு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இந்த நியமனங்களை உரிய இடங்களில் நிரப்புவதற்கும் மத்திய அரசு அனுமதியளிக்கவில்லையா?

வன்னியில் ஆசிரிய வளப் பற்றாக்குறைக்குச் சில காரணங்கள் உண்டு.

இந்த வலயங்கள் உள்ளடக்கும் பிரதேசங்களின் பின்தங்கிய நிலை, காடும் வெளிகளுமான புவியியல் அமைப்பு, வளராத கல்வி நிலை, வன்னிப் பிரதேசம் என்ற மாற்று மனப்பாங்கு எல்லாம் இதற்குக் காரணம். குடிசனச் செறிவடர்த்தி குறைந்த கிராமங்களை அதிகமாகக் கொண்டவையே வன்னி மாவட்டங்கள். இப்படியிருப்பதால் கல்வித்துறையில் உயர்வு, பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்துத் தொடர்பாடல் உள்ளிட்ட பல விடயங்களில் முன்னேற்றமடையாமல் பின்தங்கியவையாக உள்ளன. இதனால் வன்னி நிர்வாகத்துக்கான அறிவு, ஆளுமைசார் ஆளணி வளம் போதாதுள்ளது.

இதனால் இந்த வலயங்களுக்கான ஆசிரியர் மற்றும் கல்வி நிர்வாக உத்தியோகத்தர் வளம் வெளியிலிருந்தே பெறப்படவேண்டியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து.

இது தனியே கல்வித்துறைக்கு மட்டுமான பிரச்சினையுமில்லை. மருத்துவம், நீதி, நிர்வாகத்துறை, வீதி அபிவிருத்தி, தொழில்நுட்பம், விவசாய விருத்தி எனச் சகலவற்றுக்கும் பொருந்தும். அதாவது வன்னியில் அரச நிர்வாக இயந்திரத்தை இயக்குவதற்கான ஆளணியில் 60 - 70 வீதம் யாழ்ப்பாணத்திலிருந்தே பெறப்படுகிறது. அதிலும் மேலாதிகாரிகளாக இருப்போர் 95 வீதத்துக்கும் அதிகமானோர்.

வன்னி மாவட்டங்களின் ஆசிரிய வளத்தேவைகளில் 60 – 80 வீதத்துக்கும் கூடுதலானவர்கள் யாழ்ப்பாணத்தவரே. இதில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், நடனம், இசை போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணவாசிகளே. க.பொ.த உயர்தரத்துக்கான ஆசிரியர்களில் 90 வீதமான தேவையை யாழ்ப்பாண ஆசிரியர்களைக் கொண்டே நிரப்ப வேண்டியுள்ளது.

ஆகவேதான் அரச உத்தியோகத்தர் நியமனங்களில் வன்னி மாவட்டங்களின் ஆசிரியர் மற்றும் பிற துறைகளுக்கான உத்தியோக வளத்தேவையையும் அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கமைவாகவே இந்த நியமனங்களின்போது வெளிமாவட்டங்களில் கட்டாயமாக சேவையாற்ற வேண்டும் என்ற விதிமுறையும் உருவாக்கப்பட்டது. இங்கே வெளிமாவட்டங்கள் என்பது யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ள வன்னி மாவட்டங்கள்தான்.

இதுவரையிலான நடைமுறையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் உத்தியோகத்த நியமனங்களைப் பெறுவோர் சொந்த மாவட்டங்களுக்கப்பால் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுவது குறைவு. அப்படி அனுப்பப்படுவதேயில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இந்த மாவட்டங்களிலேயே வெற்றிடங்களை நிரப்ப முடியாதுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கூடுதலானோர் நியமனம் பெறுவதால் அவர்கள் கட்டாயம்  வெளிமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. வன்னி மாவட்டங்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காகவே இவர்களுக்கான நியமனம் வழங்கப்படுகிறது. ஆகவே அவர்களுக்கான பணியிடங்களை யாழ்ப்பாணத்தில் வழங்க முடியாது. அங்கே அதற்கான வெற்றிடங்களுமில்லை. அதாவது, யாழ்ப்பாணத்தவர்  யாழ்ப்பாணத்துக்குள்தான் வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு குறைந்தளவானவர்களே போதும். ஏனையவர்களுக்கு உத்தியோக வாய்ப்பிருக்காது.

எனவே நியமனம் பெற்றவர்கள் சுழற்சி முறையில் வெளிமாவட்டங்களுக்கு பணியாற்றுவதற்குச் சென்றேயாக வேண்டும் என்பது பொது விதி. ஆனால், அது நடைமுறையில் வெற்றியளித்ததாக இல்லை. வெளிமாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டால் அல்லது இடமாற்றம் செய்யப்பட்டால் எப்படியோ ஒரு தொகுதியினர் தங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளின் வழியே செல்வாக்கைப் பயன்படுத்தி சொந்த ஊருக்கு அல்லது அயலூருக்கு இடமாற்றம் பெற்றுவிடுகிறார்கள்.

இதுதான் பிரச்சினையே.

முன்பு ஐந்து ஆண்டுகள் வெளிமாவட்டச் சேவையாற்ற வேண்டும் என்ற விதி, பின்னர் இரண்டு ஆண்டுகளாகச் சில திணைக்களங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இதையும் சுழித்துக் கொண்டு பல உத்தியோகத்தர்களும் ஆசிரியர்களும் யாழ்ப்பாணத்திலேயே தங்கி விடுகிறார்கள்.

இதற்கு அரசியல் செல்வாக்கு, நிர்வாக உயரதிகாரிகளின் ஆதரவு போன்றவை காரணமாக உள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் மேலதிக ஆளணி வளமும் வன்னி மாவட்டங்களில் ஆளணிப் பற்றாக்குறைப் பிரச்சினையும் உருவாகிறது. (இதேவேளை பாராட்டுக்குரிய விதத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு வன்னி மாவட்டங்களுக்குத் தாங்களாகவே வந்து வேலை செய்கின்ற பலரும்  இருக்கிறார்கள்).

இந்த நிலையில்தான் கல்வி அமைச்சினால் கடந்த ஆண்டு 36 ஆசிரியர்களுக்கு துணுக்காய் கல்வி வலயத்தில் நியமனம் வழங்கப்பட்ட போதும் ஆறு பேர் மட்டுமே துணுக்காய் வலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.

எஞ்சியவர்கள் கடமைகளை பொறுப்பேற்காது வேறு இடங்களில் இணைப்பில் உள்ளனர்.  இந்த விவகாரம் முற்றி வடமாகாண ஆளுநரின் கவனத்திற்குச் சென்றது. இதனையடுத்து ஆளுனர் றெஜினோல்ட் கூரே இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு கூட்டத்தை உத்தியோகபூர்வமாக துணுக்காய் வலயத்தில் கூட்டியிருக்கிறார். அதில் ஆசிரிய வளப்பகிர்வுப் பிரச்சினைகள், ஏனைய வளப்பற்றாக்குறைகள், தேவைகளைப் பூர்த்தி செய்யும் முறைமைகள் எனப் பலவற்றைப் பற்றியும் ஆராயப்பட்டது.

இடமாற்றம் பெற்றவர்கள் உரிய இடங்களில், உரிய காலத்தில் கடமைகளை பொறுப்பேற்காததற்கான காரணத்தினையும் இதற்காக உயர் அதிகாரிகள் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பதையும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என  கல்வி அமைச்சின் செயலாளருக்குப் பணித்துள்ளார் ஆளுனர்.

இதேவேளை கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில கல்வி வலயங்களில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டாய்வுகளில் மேலதிக ஆசிரிய வளம் அங்கிருப்பது கண்டறியப்பட்டது. யாழ்ப்பாண நகரத்திலுள்ள இரண்டு சிறிய பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கையை விட அதிகளவான ஆசிரியர்கள் குவிந்திருப்பதை இந்த மதிப்பீட்டாய்வு காட்டியது. ஒரு பாடசாலையில் மாணவர்

இது தொடர்பாக உடனடியாக நிலைவர அறிக்கை சமர்ப்பிக்க வேணும் என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர்.

இதன்மூலம் இங்கே விக்கினேஸ்வரனின் வடமாகாண நிர்வாகம் திறனற்ற, பிரதேச ஒதுக்கலை மையமாகக் கொண்டதாக இருந்திருக்கிறது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையிட்டு விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக இருப்போர், விக்கினேஸ்வரன் அங்கத்துவம் வகிக்கின்ற தமிழ் மக்கள் பேரவை போன்ற தரப்புகள் எந்தக் குற்றவுணர்ச்சியும் கொள்ளவில்லை. 

விக்கினேஸ்வரனின் நிர்வாகத்தின் கீழே நிர்வாகச் சீர்கேட்டினால் பதவிநீக்கம் செய்யப்பட்ட தம்பிராஜா குருகுலராஜா மற்றும் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோர் பதவி வகித்திருக்கின்றனர். இந்த இருவரும் கூட வன்னிப் பிராந்தியத்தின் ஆசிரிய வளப் பகிர்வில் சரியான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

இதற்குக் காரணம், அரசியல் நலனே. இடமாற்றங்கள், வன்னிக்கான நியமனங்களில் கறாராக நின்றால் அதன் மூலம் தங்களுக்கான ஆதரவுத்தளத்தை இழக்க வேண்டும் என்ற அச்சவுணர்வே இதற்கான அடிப்படை. ஒழுங்கான முறையில் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால் முகம் பார்க்க முடியாது. பக்கச்சார்பாகவும் விருப்பு வெறுப்பின்படியும் நடக்க முடியாது. பின்தங்கிய – பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நலன் மட்டுமே குறியாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், இங்கே அனைத்துத் தவறுகளும் விடப்பட்டுள்ளன. தமது எதிர்கால அரசியலுக்கான வாக்கு வங்கியைக் கவனத்திற் கொண்டு இவர்கள் செயற்பட்டதன் விளைவுகளே இந்தச் சமனற்ற ஆசிரிய வளப்பகிர்வு நடந்ததற்குக் காரணமாகும். இதனை வன்னி மாவட்ட மக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந்தக் குறைபாடு தற்போது ஆளுநரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இவ்வளவு காலமும் வடமாகாண சபையின் கீழ் இதனைச் சீர் செய்வதற்கான சூழல் இருக்கவில்லை. இதிலிருந்தே தெரிகிறது அந்த நிர்வாகத்தின் திறன் எப்படி இருந்தது என.

இப்பொழுது ஆளுநர் இந்தக் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான  நடவடிக்கைளை எடுக்க வேண்டும். ஆளுநர் அப்படி நடவடிக்கை எடுக்க முற்படும்போது அது மத்திய அரசின் தலையீடாகவும் எல்லை மீறலாகவும் சித்திரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளுண்டு. ஆனால், அடுத்த மாகாணசபை நிர்வாகம் தெரிவு செய்யப்படும் வரையில் ஆளுநரே எல்லாவற்றுக்கும் பொறுப்பு. இதிலும் சுழித்துக் கொண்டு தங்கள் கைவரிசையைக் காட்டக் கூடிய நிலைமைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. முன்னர் ஆளுநராக இருந்த ஜீ.ஏ.சந்திரசிறிக்கே காதிப் பூவைத்த பல சங்கதிகள் உண்டு. அப்படி றெஜினோல்ட் கூரேயின் காதுகளிலும் பூக்கள் சூட்டப்படலாம். இப்போதும் அரசியல் தலையீடுகள், செல்வாக்குகளுக்கு இடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

எனவே இந்த இடத்தில் ஆளுநர் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் மையப்படுத்திய ஒரு செயல் மேம்பாட்டுக்குழுவை அமைப்பது நல்லது. அது பாரபட்டமற்ற முறையில் விடயங்களை அணுகுவதற்கு உதவும்.

இல்லையெனில் பழைய வோதாளம் புதிய முருங்கையிலும் ஏறியே தீரும்.

துணுக்காயைத் தொடர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு வலயங்களிலும் ஆளுநரின் மதிப்பீட்டாய்வு – உண்மை கண்டறியும் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அடுத்த கட்டங்களில் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் நடக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் பல உண்மைச் சங்கதிகள் வெளித்தெரிய வரும்.

இதில் மக்கள் கவனிக்க வேண்டிய விசயம் ஒன்றுள்ளது. இவ்வளவு முறைகேடான – பிரதேச வேறுபாடுள்ள நிர்வாக நடவடிக்கைளைப் பேணிப்பாதுகாக்கின்றவர்களையா எதிர்காலத்திலும் அரசியல் தலைமைத்துவத்துக்குத் தேர்வு செய்வது என? இப்படிப் பிரதேச வேறுபாடுகளைப் பார்த்துக் கொண்டு எப்படி வடக்குக் கிழக்கு இணைப்பையும் தமிழீழக்கனவையும் முன்னிலைப்படுத்த விளைகிறார்கள்? எனவும். ஞாபக மறதி, உணர்ச்சி வசப்படுதல் போன்ற நோய்களுக்குப் பலியாகாமல், ஒவ்வொருவரும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

இவ்வளவுக்குள்ளும் ஒரு மகிழ்ச்சியான சேதி, “கஷ்டப்பட்ட பகுதிகளிலிருந்து 2019 ம் ஆண்டு வருடாந்த இடமாற்றம் செல்லும் ஆசிரியர்களுக்குப் பதில் ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்காத வரையில் அவர்களைப் பாடசாலைகளிலிருந்து விடுவிக்க வேண்டாம்” என்ற ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு.

மேலும் பாடசாலை ஆசிரியர்களுக்கான கற்கை விடுமுறை, பிரசவ விடுமுறைகளை வழங்கும்போது அவர்களுக்கான பதில் கடமையாற்றும் ஆசிரியர்களின் கைப்பட சம்மதக் கடிதங்களை வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் கவனப்படுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. அத்துடன், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஆசியர்களுக்கான விடுமுறைக் காலத்தினை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இறுக்கமான விதிமுறையை விதிப்பதற்குக் காரணம், கடந்த ஆறு மாத காலப்பகுதியினுள் 450க்கு மேற்பட்ட ஆசியர்கள் வெளிநாடு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தம்மிடம்  விடுமுறை அனுமதி பெற்றிருப்பதைக் கவனித்த பிறகு எடுக்கபட்ட தீர்மானம் என ஆளுநர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது ஆசிரியர்களின் அடிப்படை உரிமையோடு சம்மந்தப்பட்டது. இனி இவை தொடர்பாக ஆசிரிய தொழிற்சங்கங்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவுள்ள என்பதையும் நாம் பொறுத்திருந்தே பார்க்க முடியும்.

இது சிலருக்கு தவறாகத் தோன்றலாம். ஆனால் எதிர்காலத் தலைமுறையாகிய பிஞ்சுகளின் தலைவிதியோடு சம்மந்தப்பட்டது. அவர்களின் வாழ்க்கையோடு பொறுப்பில்லாமல் யாரும் விளையாட முடியாதல்லவா!

இதையெல்லாம் கவனத்திற் கொள்ளாமல் தமது தவறுகளை மறைப்பதற்காக அரசியல்வாதிகள் ஆளுநரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு முற்படுவர். யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளும் சில இணையத்தளங்களும் இதற்குத் தோதாக போர்க்கொடி தூக்கக் கூடும். ஆனால், இவை அப்படிச் செய்வதை விடுத்து, உண்மைகளைக் கண்டறிவதற்கு களவிஜயம் செய்ய வேண்டும். வன்னிக்கும் செல்ல வேண்டும். அகவிழிகள் திறக்கட்டும்.