Theneehead-1

   Vol:17                                                                                                                               30.11.2018

அமரர் எஸ்.பொ. அங்கம் -  4

மதிப்பீடுகளுக்கு  நடுவே  உண்மைகளைத் தேடுவோம்.

மதிப்பீடுகள்  கசக்கும் - இனிக்கும் -  துவர்க்கும் -  இதில் உண்மைகள்   சுடுவதும்  மறைபொருள்தான்.

                                    முருகபூபதி

பலவருடங்களின்  பின்னர்   எஸ்.பொ.,   2003   இல்   தமது  வரலாற்றில் வாழ்தல்  நூலை  இரண்டு   பாகங்களாக  1924  பக்கங்களில் வெளியிட்டபொழுது   முன்னர்  பண்டிதs.ponnuduraiர்  வி. சீ . கந்தையாவின் நூலை   ஒரு  தலையணைக்கு  ஒப்பிட்டு  கேலி  செய்தீர்களே.... தற்பொழுது    நீங்கள்  இரண்டு  பாகங்களில்  அவரது  நூலைவிட மும்மடங்கு   பெரிய  நூலை   இரண்டு   பாகங்களில் வெளியிட்டிருக்கிறீர்களே....?  என்று  நேரடியாக   கேட்டபொழுது - "ஆம்.....அதற்கென்ன    பண்டிதர்    தலைக்குமாத்திரம்  வைத்துக்கொள்ள நூல்    தந்தார்.   ஆனால்  - நான்   தலைக்கும்  காலுக்கும் வைத்துக்கொள்ள   இரண்டு  பெரிய  நூல்கள்  தந்துள்ளேன்."  - என்றார்.

எஸ்.பொ.வின்  இதுபோன்ற  கூற்றுக்கள்  சகிக்கமுடியாதவைதான். எனினும்   அவரது  இதுபோன்ற  மேலோட்டமான  கருத்துக்களை அவரது   இயல்பான  நக்கல்  என்று  மாத்திரம்  எடுத்துக்கொண்டு நகரவேண்டியதுதான்.

பண்டிதர் வி.சீ.கந்தையாவின்    மட்டக்களப்பு தமிழகம்  மிகவும்  தரமான    ஆய்வேடு.    அதன்   பெறுமதி  கருதி  அதன்  இரண்டாவது பதிப்பினை   நேர்த்தியாக  அச்சிட்டு  2002   இல்  வெளியிட்டனர் பிரான்ஸ்    எக்ஸில்   அமைப்பினர்.

எஸ்.பொ. வின்  மூத்த  புதல்வர்  டொக்டர் அநுரா,   எஸ்.பொ.வின் வாழ்விலும்   பணிகளிலும்  இரண்டறக்கலந்திருந்தவர்.    இவர் எழுத்தாளர்   இல்லை.  ஆனால் ,  எழுத்தாளர்களின்  நண்பர்.  தனது தந்தைக்கு   தக்க  ஆலோசனைகளை    வழங்கியவர்.

எஸ்.பொ.வின்  அனைத்துப்படைப்புகளிலும்  மிகவும்  சிறந்த உன்னதமான   படைப்பு  அவரது  மூத்த  புதல்வன்   அநுரா அவர்கள்தான்  என்று  எஸ்.பொ.வுடன்  கருத்தியல்  ரீதியில் முரண்படும்   மல்லிகை  ஜீவா   அடிக்கடி  சொல்வார்.

(இந்தப்பதிவுகளை    எழுதும்  வேளையில்  கொழும்பில்  இருக்கும் மல்லிகை   ஜீவாவுடன்  தொலைபேசியில்  தொடர்புகொண்டு அவருக்கும்   எஸ்.பொ. வின்  மறைவுச்செய்தி  சொன்னேன்.   அவர் உடனே    நினைவுபடுத்தியது  அநுராவைத்தான் )

அநுரா -  சென்னையில்  மித்ர  பதிப்பகத்தின்  முழுநாள்  இலக்கிய விழாவை   வெகு  சிறப்பாக  நடத்தி  முடித்த  பின்னர்  சிட்னியிலும் ஒரு    பெரு விழாவை   28-08-2004   ஆம்   திகதி  சிட்னி   ஹோம்புஷ் ஆண்கள்    உயர்நிலைக்கல்லூரியில்  நடத்தினார்.

இவ்விழாவில்   மூத்த  கவிஞர்  அம்பியின்  பவள  விழா நிகழ்ச்சிகளும்   இடம்பெற்றன.  அன்றைய  விழாவில்  மித்ர வெளியீடுகளான    ஆசி. கந்தராஜாவின்   உயரப்பறக்கும்   காகங்கள்,  தமிழச்சி   சுமதி  தங்கபாண்டியனின்  எஞ்சோட்டுப்பெண்,   நடேசனின் வண்ணாத்திக்குளம்,   கவிஞர்  அம்பியின்  அந்தச்சிரிப்பு,  எஸ்.பொ.வின்     சுயசரிதை    வரலாற்றில்    வாழ்தல்  இரண்டு பாகங்கள்,     எஸ்.பொ.    ஒரு  பன்முகப்பார்வை,  மற்றும்  பூ   ஆகியன வெளியிடப்பட்டன.

மண்டபம்   நிறைந்த  இலக்கிய  சுவைஞர்கள்  அனைவருக்கும்  அன்று இராப்போசன   விருந்தும்    வழங்கினார்    அநுரா.

இந்த   நிகழ்விற்கு  முருகபூபதி  தலைமை   ஏற்க,  ந.கருணகரன் பேராசanura-ponnuthuraiிரியர்  பொன். பூலோக சிங்கம்,   திருநந்த குமார்,   டொக்டர் ஜெயமோகன்,    மா. அருச்சுணமணி,  தனபாலசிங்கம்,  குலம்  சண்முகம் ஆகியோருடன்   இலங்கையிலிருந்து  வருகை  தந்த  ஞானம்  ஆசிரியர் டொக்டர்   தி.ஞானசேகரன்  தமிழகத்திலிருந்து  வருகை  தந்த  தமிழச்சி  சுமதி  தங்கபாண்டியன்  ஆகியோரும்  உரையாற்றினர் என்பது    குறிப்பிடத்தகுந்தது.

இந்நிகழ்வின்   நிகழ்ச்சிகளை   ஒருங்கிணைத்து  அறிவித்தார்  ஓவியர் ஞானத்தின்   புதல்வன்  ஞானசேகரம்  ரங்கன்.

பொன்னுத்துரையின்   வாழ்வில்  என்றும்  பக்கபலமாக  விளங்கிய திருமதி   பொன்னுத்துரை  அவர்களை   மேடைக்கு  அழைத்து அவருக்கு   பூச்செண்டு  வழங்கினார்  முருகபூபதியின்  மகள் பிரியாதேவி.

இந்நிகழ்வில்  நன்றியுரையை   நிகழ்த்தியவர்  மாத்தளை   சோமு அவர்களினால்   எஸ்.பொ.வுக்கு  1989  இல்  சிட்னியில் அறிமுகப்படுத்தப்பட்ட    பத்திரிகையாளர்    சுந்தரதாஸ்.

சிட்னியில்   இதுவரைகாலமும்  நடந்த  இலக்கிய  விழாக்களில் மேற்குறித்த   இந்த  விழா   ஒரு  மைல் கல்  என்று  சொல்வது மிகையான   கூற்று  அல்ல.  இதில்  வேடிக்கை   என்னவென்றால்  இந்த   விழாவில்  நேரம்  பற்றாக்குறையினால்  எஸ்.பொ.  ஒரு நிமிடம்தான்    பேசினார்.

அவர்   மறைவதற்கு  சில  வருடங்களுக்கு  முன்னர்  அவுஸ்திரேலியா   கம்பன்  கழகம்  அவருக்கு  சான்றோர்  விருது வழங்கி   கௌரவித்திருக்கிறது.   இலக்கியப்படைப்பாளிக்கு  இவ்வாறு விருது  வழங்கியிருப்பதனால்  அந்தப்பெருமை   கம்பன்  கழகத்திற்கும்  கிட்டியிருக்கிறது.

எஸ்.பொ.   குறித்த  மதிப்பீடுகள்  அவர்  வாழ்ந்த  காலத்தில் வந்துள்ளன.   அவற்றில்  சிலவற்றை  அவர்  ஏற்காமல்  கடுமையான தொனிகளில்   எதிர்வினையாற்றினார்.  தமது  நூல்களில் பதிவுசெய்தார்.    இன்று  அவர்    மறைந்துவிட்டார்.   அவரது  மறைவுக்கு  ஊடகங்களிலும்  மின்னஞ்சல்களிலும்  முகநூல்களிலும் அனுதாபம்   தெரிவித்தும்  மதிப்பீடுகளை  முன்வைத்தும்  பலர் எழுதுகிறார்கள்.   பலர்  எழுதுவதற்கு  தயங்குகிறார்கள்.   பலர் தாமதிக்கிறார்கள்.

பொன்னுத்துரையின்   பார்வையில்  அவர்  மற்றவர்கள்  மீது கொண்டிருந்த   மதிப்பீடுகளுக்கும் --  அவர்  குறித்து  மற்றவர்கள் அவர்   மீது  கொண்டிருக்கும்  மதிப்பீடுகளுக்கும்  இடையேதான் உண்மைகளை  நாம்  தேடவேண்டியிருக்கிறது.

அந்த   உண்மைகள்   கசக்கலாம்.   இனிக்கலாம்.   ஆயினும்  உண்மை சுடும்    என்ற    மறைபொருளும்  உண்டு.

காலம்   அவரைப்பற்றிய  சரியான  மதிப்பீடுகளை   வெளியிடும்  என நம்பலாம்.

எனது  எஸ்.பொ.  பற்றிய  இந்தத்தொடரின்  முதலாவது  அங்கத்தை படித்துவிட்டு --  இலங்கை   கண்டியில்  தற்பொழுது  வதியும்  யாழ். பல்கலைக்கழகம் -- பேராதனைப்பல்கலைக்கழகம்  ஆகியனவற்றின் தகைமைசார்  பேராசிரியரும்    மூத்த   இலக்கிய    விமர்சகருமான எனது   அருமை  நண்பர்  எம்.ஏ. நுஃமான்  எனது  மின்னஞ்சலுக்கு  தனது   ஆழ்ந்த  அனுதாபங்களையும்  தெரிவித்து  பின்வரும்  தனது சிறிய   கவிதையையும்  இணைத்திருந்தார்.
இருந்து  சென்ற   முன்னோரின்
இடத்திலெல்லாம்  நாம்  இன்று
விருந்து   செய்து   மகிழ்கின்றோம்
விகடம்   செய்து    மகிழ்கின்றோம்
இருந்த  இடம்விட்டு நாமும்  இனி
எழுந்து  சென்றால்  இங்கிருந்து
விருந்து  செய்வார்  யார்...  யாரோ...?
விகடம்   செய்வார்  யார்...   யாரோ...?
------------------------------------------------------------------------------------------------------------
முடிவுரை:
எஸ்.பொ.வின்   மறைவின்  பின்னர்  நான்கு  அங்கத்தில்  இப்படியொரு   நீண்ட  பதிவினை  எனது  இலக்கிய  நண்பர்களும் வாசகர்களும்   என்னிடமிருந்து   எதிர்பார்த்திருக்கவே   மாட்டார்கள். தனிப்பட்ட  விருப்பு  வெறுப்புகளுக்கு  அப்பால்தான்   ஒவ்வொரு படைப்பாளியும்   ஊடகவியலாளனும்  இயங்கவேண்டும்  என்ற  பால பாடத்தை   எனது   எழுத்துலக    பிரவேசத்திலேயே    கற்றுக்கொண்டேன்.   நான்  கற்றதையும்  பெற்றதையும்  இதுபோன்ற பதிவுகளில்தான்    வெளிப்படுத்த  முடியும்.    எஸ்.பொ.   என்றும் எம்முடன்    நினைவுகளாக  இருப்பார்.  அவரது  அருமை   மனைவி மற்றும்    மக்கள்  -  மருமக்கள் -  பேரப்பிள்ளைகள் - அவருடைய இலக்கிய   நேசர்கள்   அனைவருக்கும்  இந்தப்பதிவின்  ஊடாக  எனது ஆழ்ந்த   அனுதாபங்களை   தெரிவித்துக்கொள்வதுடன்   எஸ்.பொ. பற்றிய   எனது  நினைவுப்பதிவுகளுக்கு  களம்  வழங்கிய  கனடா பதிவுகள் -   ஜேர்மனி   தேனீ   இணைய  இதழ்களுக்கும்    அவுஸ்திரேலியா   நடேசனின்  வலைப்பூவுக்கும்  இந்தப்பதிவுகளை தமது  முகநூல்களில்  ஏற்றுக்கொண்ட  அன்பர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றி.

அன்புடன்    முருகபூபதி - அவுஸ்திரேலியா

letchumananm@gmail.com