Theneehead-1

   Vol:17                                                                                                                               31.10.2018

இந்தோனேசிய விமான விபத்து: 24 பைகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்

ஜகார்த்தா: இந்தோனேசிய லையன் ஏர் விமானம் விழுந்த ஜாவா கடindonற்பரப்பில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் 24 பைகளில் மனித உடல் பாகங்களை மீட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் 132 பேரிடம் இருந்து மரபணு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணி நடைபெறும் என்றும், ஒவ்வொரு பையிலும், ஒன்றுக்கும்  மேற்பட்ட மனிதர்களின் உடல் பாகங்கள் வைக்கப்படுவதால், ஒவ்வொரு உடல் பாகத்தையும் அடையாளம் காண்பது என்பது மிகவும் சிக்கலானது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

லையன் ஏர் போயிங் விமானம் விழுந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விமானத்தின் வேகம் மற்றும் எடை காரணமாக, அது கடற்பரப்புக்குள் விழுந்த போதே, அழுத்தம் காரணமாக விமானம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியிருக்கும் என்றும், அதில் இருந்தவர்களும் உடல் சிதறி உயிரிழந்திருக்கலாம் என்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் பின்னணி:

189 பேருடன் இந்தோனேஷிய விமானம் திங்கள்கிழமை கடலில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த லயன் ஏர் தனியார் நிறுவனம், குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங்-737 மேக்ஸ் ரக விமானமொன்று தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்க்கா பெலிதுங் மாகாணத் தலைநகர் பங்கால் பினாங் நகர விமான நிலையத்தை நோக்கி உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி) புறப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த விமானி பவ்ய சுனேஜா அந்த விமானத்தை ஓட்டிச் சென்றார்.

விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே, மீண்டும் விமான நிலையம் திரும்புவதற்கு விமானி சுனேஜா அனுமதி கேட்டதாகவும், அதற்கு அனுமதி கிடைத்த பிறகும் 10 நிமிடங்களில் அந்த விமானம் கடலுக்குள் விழுந்து நொறுங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்தோனேஷியாவின் தேடுதல் மற்றும் மீட்புக் குழு அமைப்பின் இயக்குநர் பம்பாங் சூர்யோ அஜி கூறியதாவது:

லயன் ஏர் விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியிலிருந்து மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் விமானத்திலிருந்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம்.

நாங்கள் கண்டெடுத்த உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை என்பதாலும், விமானம் கடலில் மூழ்கி நீண்ட நேரம் ஆகிவிட்டது என்பதாலும், அதிலிருந்த 189 பேரும் உயிரிழந்ததாகவே கருதுகிறோம்.

எனினும், விபத்துப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியிலிருந்து, அந்த விமானத்தில் பாகங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானத்தின் உடல் பகுதி கடலுக்குள் 30 முதல் 40 மீட்டர் ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பகுதியில் 40 நீர்மூழ்கி வீரர்களும், சுமார் 150 மீட்புக் குழுவினரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுந்து நொறுங்கிய விமானத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவரும், இந்தோனேஷிய நிதியமைச்சகப் பணியாளர்கள் 20 பேரும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

737 மேக்ஸ் ரக விமானங்களைக் கடந்த ஆண்டின் மே மாதம் முதல் விற்பனை செய்யத் தொடங்கிய போயிங் நிறுவனம், அதிலுள்ள என்ஜின் கோளாறு காரணமாக அவற்றின் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளதாக ஏர்லைன்ரேட்டிங்.காம் இணையதளம் தெரிவித்துள்ளது.