a_Pen

முதற்பக்கம்

மணிக்குரல்

ஈ.பி.ஆர்.எல்.எப்

ஈ.பி.டி.பி

புளொட்

தூ

ராஜேஸ்பாலா

டெலோ நியூஸ் 

இலங்கைநெற் 

மீன்மகள்

 சூத்திரம்   

உண்மைகள்  

கவிமலர்

 பூந்தளிர்   

 எங்கள்தேசம்

நோயல்நடேசன் 

விடிவெள்ளி

எங்கள்பூமி 

புயல்   

யாழமுஸ்லீம் 

புண்ணியாமீன் 

பஷீர்      

கவசங்களைதல்  

எதுவரை

அறிக்கை நியூஸ்

அதிரடி

சுபீட்சம்

தினமுரசு

காத்தான்குடி இன்போ

ARRR

சிறிலங்கா புளொக்

என்தேசியம்

யாழ்நாதம்

இலங்கைக்குரல்

பற்றிபறை

Rajesbala

Asientribune

The lka academic

Tamil Week 

The Hindu

Daily News

Sunday Times

Daily Mirror

The island

The Sunday Leader

ColomboPage

Sunday Times

CNN

BBC

Newsnow

Thendral Radio

NamuPonn

 

Thenee_head02

Online Newspaper in Tamil                        Vol.  15                             01.05.2015

எழுதமறந்த  குறிப்புகள்  02

பெண்  பிரதமரின்  ஆட்சிக்காலத்தில்  புனித  பூமியாம்   கதிர்காமத்தில்  ஒரு  பெண்ணின்  புனிதம்  பறிக்கப்பட்டது.

மாணிக்க கங்கை  அந்தப்பெண்ணின்   அலறலையும்  கேட்டுக்கொண்டு அமைதியாக   ஓடியது.

கதிர்காமக்கந்தன்    அனைவருக்கும்  அருள்பாலித்த  மண்ணில் மூவினத்தின்    பிரதிநிதிகள்  பிரேமாவதி  மனம்பேரியின்  உடலுக்கு புதைகுழி   தோண்டினர் 

                                              முருகபூபதி

இன்று  மே  தினம்.

" உலகத் தொழிலாளர்களே  ஒன்றுபடுங்கள் "  என்ற  கோஷத்துடன் தொழிலாள   Late Premavathy Manamperyவிவசாய  பாட்டாளி  மக்கள்  தமது  உரிமைகளுக்கு உரத்துக்குரல்   கொடுத்து  ஊர்வலம்  செல்லும்  நாள்.

இன்று   கொழும்பில்  17  மேடைகளில்   பிரிந்து  நின்று உலகத் தொழிலாளர்களே   ஒன்றுபடுங்கள்  என்பார்களா...?  அல்லது  அடுத்த தேர்தல்  பற்றி  பேசுவார்களா...?

இலங்கையில்   தொடர்ச்சியாகவே  மேதின  மேடைகளில்  இந்த உழைக்கும்  வர்க்கம்  பற்றியா  பேசப்படுகிறது...?  அந்த  வர்க்கத்தின் நலன்கள்   குறித்தா  தீர்மானங்கள்  எடுக்கப்படுகின்றன....?

அனைத்து   மே  தின  மேடைகளிலும்  அடுத்த  தேர்தலைக்குறியாக வைத்துத்தான்   பேசப்படுகிறது.   இலங்கையில்  ஒவ்வொரு  வருடமும்   ஏப்ரில்  மாதமும்  மே  மாதமும்   வரலாற்று முக்கியத்துவம்   வாய்ந்த  மாதங்கள்.  1971   ஏப்ரிலில்  மிகவும் கொடூரமான   முறையில்  அடக்கி  ஒடுக்கப்பட்டது  மக்கள்  விடுதலை   முன்னணியின்  போராட்டம்.   நதிகளில்  மிதந்த சடலங்கள்,   பொலிஸ்  நிலையங்களின்  பின்வளவுகளில்  எரிக்கப்பட்ட   சடலங்கள்,   ரயர்களுடன்  கொளுத்தப்பட்ட  இளம் உயிர்கள்.    கூட்டிக்கழித்துப்பார்த்தால்  25   ஆயிரத்தையும்   தாண்டும் அவற்றின்   எண்ணிக்கை.

2009   ஆம்  ஆண்டு  மே   மாதத்தில்  மற்றுமொரு   இனச்சங்காரம் முள்ளிவாய்க்காலில்    முடிவுற்றது.   இதில்  கொல்லப்பட்ட  மனித உயிர்கள்   பற்றிய  சரியான  மதிப்பீடுகள்  இன்றி,  இன்னமும் போர்க்குற்றம்   பற்றி   பேசப்படுகிறது.  காணாமல்  போனவர்களின் உறவினர்களின்   கண்களிலிருந்து  கண்ணீர்  இன்னமும் வற்றவில்லை.

தென்னிலங்கையிலும்   வடக்கிலும்  ஆயுதம்  ஏந்திய  இரண்டு  பெரிய தலைவர்கள்   இன்று  இல்லை.   இருவருமே   கொல்லப்பட்டதுடன் அவர்கள்   இரண்டுபேரும்  தலைமை தாங்கிய  பேரியக்கங்களின் ஆயுதப்போராட்டம்   முடிவுக்கு  வந்தாலும்,   மக்கள்  விடுதலை முன்னணி   ஜனநாயக  நீரோட்டத்தில்  சங்கமித்து -  ஆயுதங்களை நீட்டாமல்,  கைகளை  நீட்டி  வாக்குகளை  கேட்டு  பாராளுமன்றம் சென்றது.

ஆனால் -  புலிகளின்  மீதான   தடை  தொடர்வதனால் மே  மாதம்  முள்ளிவாய்க்காலுடன்  முற்றுப்பெற்ற  அந்த  இயக்கத்தின் முகவர்களாக   இருந்த  அகிம்சாவாதிகள்  பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

ரோஹண   விஜேவீராவின்  மனைவி  சித்ராங்கனியும்   ஐந்து பிள்ளைகளும்  இன்னமும்  அரச பாதுகாப்பில்  ஒரு  கடற்படை முகாமில்  வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  முத்த  பெண்பிள்ளை   ஈஷா புத்தி   பேதலித்து  தனது  தாயையும்  தம்பியையும்  தாக்கியதனால் பெற்றதாயினால்  பொலிஸில்  முறையிடப்பட்டு  காவலில் வைக்கப்பட்டாள்.

வேலுப்பிள்ளை  பிரபாகரனின்  மனைவி  மதிவதனி  மற்றும் பெண்பிள்ளை   என்ன  ஆனார்கள்...? என்பது  தொடரும்  மர்மம்.

இந்த  பத்திக்கு  நான்  வைத்த  தலைப்பு  இயல்புகள்  பற்றியதே.

சூழல்,   சுற்றம்,   சர்வதேச  மாற்றங்கள்  எதனையுமே  கவனத்தில் -கருத்தில்  கொள்ளாமல்  தமது  இயல்புகளில்  பிடிவாதமாக  இருந்த இரண்டு  பெரிய  ஆளுமைகளின்  இயல்புகள்  -  முடிவில் அவர்களையும்   அழித்து,   அவர்களை  நம்பியிருந்தவர்களையும் நட்டாற்றில்   கைவிட்ட  கதையை   மீண்டும்  மீண்டும்  ஒவ்வொரு வருடமும்   ஏப்ரில்,  மே  மாதங்களில்   நாம் படித்துக்கொண்டிருக்கின்றோம்.

-----------
கதிர்காமம்.

இலங்கையின்  தென்மாகாணத்தில்  புனிதமான  பிரதேசம்  என பிரகடனப்படுத்தப்பKathirgamam templeட்ட   இந்த  மண்ணில்  ஒரு  காலத்தில்  வேடர்கள் வாழ்ந்தனர்.   125   ஆயிரம்   வருடத்திற்கும்  மேற்பட்ட  காலத்திற்கு முன்னர்   இருந்தே  அங்கு  வற்றாத  ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது    மாணிக்க  கங்கை.   முருகனை தமிழ்க்கடவுள்   எனச் சொல்கிறார்கள்.   அவர்  மணம் முடித்த  வள்ளி வேடுவர்  இனத்தைச் சேர்ந்தவள்.   ஆனால்,  ஆரியர்கள்  முருகனுக்கு ஏற்கனவே  தெய்வானை  என்றும்  ஒரு  மனைவி   இருக்கிறாள்  என்று   புராணம்  எழுதி  முருகனை  உயர்ந்த  சாதியில் இணைத்துக்கொண்டார்கள்.

ஆனால் , திருப்புகழ்  எழுதிய  அருணகிரிநாதர்,   முருகனின்  ஆறு முகங்களுக்கும்  அர்த்தம்  கற்பிக்கும்பொழுது " வள்ளியை  மணம் புணரவந்த   வந்த  முகம்   ஒன்று "  எனவும்  பாடிவிட்டார்.

எங்கிருந்தோ   வந்து  வள்ளியை   மணம்  முடித்து  அழைத்துச்சென்ற முருகனை  சிங்கள  பௌத்த  மக்கள்  கதரகம  தெய்யோ   என அழைக்கிறார்கள்.    இங்கு   தெய்வானைக்கும்  தனியாக  ஒரு  கோயில்   இருக்கிறது.   செல்லக்கதிர்காமத்தில்  பிள்ளையார் குடியிருக்கிறார்.

பால்குடி  பாபா   என்ற  ஒரு  இஸ்லாமியரின்  சமாதியும்  இருக்கிறது. இதனால்   இந்து,  பௌத்த,  இஸ்லாமிய  மக்களின்  புனித பூமியாகத் திகழுகின்றது.

கதிர்காமத்திற்கு   வந்த  முருகன்  வள்ளியின்  அழகில்  மயங்கி  மணம்  முடித்திருந்தால்  அந்த  அழகு  அவளுடன்  அந்த ஊரைவிட்டுப் போய்விடப்போவதில்லை.   சுற்றிலும்  வனப்பிரதேசமாக   இருந்த   கதிர்காமத்திற்கு  எனது  பாட்டிகாலத்தில் திஸ்ஸமஹாராமைக்கு   அப்பால்  வாகனப்போக்குவரத்து இருக்கவில்லை.   கதிர்காம   யாத்திரிகர்கள்  காட்டுப்பாதையில் ஒற்றையடிப்பாதையிலேயே  முருகனை   தரிசிக்கச்சென்று மொட்டையும்  அடித்துக்கொண்டு  மாணிக்க  கங்கையில்  நீராடி காவடி   எடுத்து  ஆடிவிட்டு  திரும்பினார்கள். 

 1951  இல்  எனக்கும்  அங்குதான்  மொட்டை போட்டதாக  அம்மா சொன்னார்கள்.  1963  இல்  நானும்  அங்கு சென்று  காவடி  எடுத்து ஆடியிருக்கின்றேன்.

அதன்பின்னர் நான்   அங்கு  சென்றது  1972  ஏப்ரில்  மாதம். வள்ளி எப்படி   முருகனுக்கு  அழகியோ -  அதுபோன்று   அந்த  ஊர்மக்களுக்கும்   1949   ஆம்   ஆண்டில்   ஒரு  அழகி  பிறந்தாள்  அவள் பெயர்  பிரேமாவதி  மனம்பேரி.   பத்துப்பேர்  கொண்ட  அவளது குடும்பத்தில்   அவள்  மூத்த பெண்.

இன்றும்   உலகெங்கும்  அழகிப்போட்டிகள்  நடக்கின்றன.  அதே  சமயம் பெண்ணியவாதிகள்   இந்தப்போட்டிகளை கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.   உலக  அழகிகளுக்கும்  புகழ் மங்குவதில்லை.

அப்படியாயின்   ஒரு  கிராமத்து  அழகியின்  புகழ்  அக்கிராமத்தில் எப்படி   இருந்திருக்கும்...?

பிரேமாவதி    மனம்பேரி   அழகியாக  இருந்து  உலகம்  அறியப்பட்டPremawathi_Manamperiவள்    அல்ல.   கொடூரமான  வல்லுறவினால் நிர்வாணமாக்கப்பட்டு    நடுவீதியில்  வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதனால்   அறியப்பட்டாள்.

இலங்கையில்   கோணேஸ்வரி,   கிருஷாந்தி  உட்பட   பல  பெண்கள் ஆயுதப்படையினரால்   எவ்வாறு  கொல்லப்பட்டனர்  என்பதற்கான வரலாறுகள்   இருக்கின்றன.   அந்த  வரலாற்றின்  முதல் அத்தியாயத்தில்  இருப்பவள்  கதிர்காமம் பிரேமாவதி  மனம்பேரி.

அவள்  க.பொ.த. சாதாரண  தரம்  வரையில்  பயின்றாள்.   பின்னர் பௌத்த  தஹம்  பாடசாலையில்  குழந்தைகளுக்கு  பௌத்த  தர்மம் போதிக்கும்   ஆசிரியையாக  பணியாற்றினாள்.   தனது  20  வயதில் கதிர்காமத்தில் 1969  ஏப்ரில்  மாதம்  நடந்த  புதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்களில்  நடந்த  அழகுராணி  போட்டியில் கலந்துகொண்டு   இரண்டாவது  பரிசு  பெற்றாள்.   அவளது கட்டுக்குலையாத   அழகினால்    சிநேகிதிகளின்  தூண்டுதலுடன்  1970 இலும்   போட்டிக்கு  வந்தாள்.   இம்முறை  அவள்  முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டாள்.

ஊரில்   அவள்தான்  பேரழகி  என்ற  பிம்பம்  சரியாக  ஒரு  வருடத்தில்   அதே  ஏப்ரில்  மாதம்  இல்லாது  ஒழிக்கப்பட்டது.

மக்கள்   விடுதலை  முன்னணியில்  இணைபவர்கள்  ஐந்து வகுப்புகளில்   பயில  வேண்டும்  என்பது  கட்டாயமாக  இருந்தது. இறுதி   வகுப்புதான்  ஆயுதப்பயிற்சி.   அனைத்து  விடுதலை இயக்கங்களும்    சாதாரண  துவக்குகளை   வைத்துக்கொண்டு ஆரம்பமான    அமைப்புகள்தான்.   அரச  ஆயுதப்படைகளிடம்  இருக்கும் ஆயுதங்களை    கைப்பற்றுவதும்  அவற்றின்  போர்த்தந்திரங்களில் ஒன்று.

மனம்பேரியும்  ம.வி.முன்னணியில்  இணைந்தாள்.   இயக்கத்திற்கு சீருடைகள்   தைத்துக்கொடுத்தாள்.   அவள்  இலங்கையில்  ஏற்ற தாழ்வற்ற   ஒரு  சமதர்ம  ஆட்சி  மலரும்  என்றே   நம்பியிருந்தாள். அவளது   அழகிற்கு  எங்காவது  பெரிய  இடத்தில்  மணம் முடித்துப்போயிருக்கலாம்.   ஆனால்,  அவள்  நம்பியது  மக்களுக்காக உருவாக்கப்பட்ட   விடுதலை  இயக்கத்தைத்தான்.

மக்கள்   விடுதலை   முன்னணி  1971   ஏப்ரில்  மாதம்  5  ஆம்  திகதி தென்னிலங்கையிலிருக்கும்  பொலிஸ்  நிலையங்களை  ஒரே சமயத்தில்   தாக்குவதற்கு  திட்டம்  தீட்டியது.   கதிர்காமம்  பொலிஸ் நிலையமும்   தாக்கப்பட்டது.   பொலிசாரால்  அந்த கெரில்லாத் தாக்குதல்களை  எதிர்கொள்வது  முடியாது  என்பதை  அறிந்த அன்றைய   ஸ்ரீமாவின்  அரசு  இராணுவத்தை  கிளர்ச்சி  தொடங்கிய பிரதேசங்களுக்கு   அனுப்பியது.   கதிர்காமம்  பொலிஸ்  நிலையம் தாக்கப்பட்டு  பத்து நாட்களில்  பின்னரே  அங்கு  இராணுவமுகம் அமைக்கப்பட்டது.

krishanti-kumaraswamiலெப்டினன்   விஜேசூரியா  அங்கு  தலைமை  ஏற்றதும்  தேடுதல் வேட்டை  தொடர்ந்தது.

லெப்டினன்   விஜேசூரியா  கதிர்காமத்தில்  அந்த  இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருந்தவர்களையெல்லாம்  தேடத் தொடங்கியபொழுது எப்படியோ   மனம்பேரியின்  பெயரும்  கிடைத்திருக்கிறது. அவ்வேளையில்    கதிர்காமத்திலிருந்த  போராளிகள்  காடுகளுக்குள் பின்வாங்கினர்.   ஆனால்,  மனம்பேரி  ஒரு  பெண்   என்பதால்  அவளை  கைவிட்டுச்சென்றனர்.

ஆனால்  - அவளை  கைவிடாமல்,  கைதுசெய்த  விஜசூரியா  தனது கைவரிசையை   அவளிடம்  காண்பித்தான்.   அவள்  சித்திரவதை செய்யப்பட்டாள்.   அவளும்  அவளுடன்  பிடிபட்ட  மேலும்  சில பெண்களும்    வல்லுறவுக்குள்ளாகினர்.   விஜேசூரியா  மட்டுமல்ல மேலும்   சில  இரணுவத்தினரும்  அவளை  சூறையாடினர்.

தொடர்ச்சியான    சித்திரவதைக்குப்பின்னர்  அவள்  கதிர்காமம் வீதியில்    நிர்வாணமாக  துப்பாக்கி  முனையில் இழுத்துச்செல்லப்பட்டாள்.

(இந்தக்காட்சியை   எழுதும்  நானோ  இதனைப்படிக்கும்  வாசகர்களோ கதிர்காமத்தில்   நடந்த  அந்தக்கொடுமையை   நேரில் பார்த்திருக்கமாட்டோம்.   ஆனால்  1994   ஆம்  ஆண்டு  திரைக்கு  வந்த  சேகர் கபூர்   இயக்கிய  சம்பள்  பள்ளத்தாக்கு  பூலான்  தேவி   பற்றிய திரைப்படம்   பண்டிட்  குவின்   படத்தை   பாருங்கள்.   அதில்  நடிகை சீமா பிஸ்வாஸ்,  பூலான் தேவியாக  எப்படி  நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்டு   பொதுமக்களின்  முன்னிலையில் சித்திரவதை   செய்யப்பட்டு  அவமானப்படுத்தப்பட்டாள்  என்பதை தெரிந்துகொள்வீர்கள்.)

சார்ஜன்ட்   அமரதாஸ  ரத்நாயக்கா  என்பவன்  கைகளை   தூக்கியபடி சோர்ந்து   நின்ற  மனம்பேரியை   சுட்டான்.   அவள்  தரையில்  விழுந்து   தண்ணீர்  கேட்டாள்.   அவளுக்கு  எலடின்  என்ற  ஊர்வாசி தண்ணீர்  கொடுக்கச்சென்றபொழுது   இராணுவத்தால்  தடுக்கப்பட்டார்.    அவள்  இனி  பிழைக்கமாட்டாள்  என நினைத்துக்கொண்டு   விஜேசூரியாவும்  ரத்நாயக்காவும்  முகாமுக்கு திரும்பினர்.

அவளைச்சுடத்தெரிந்தவர்களுக்கு  அவள்  உடலை  புதைக்கமாத்திரம் ஊர்வாசிகள்   தேவைப்பட்டனர்.  ஆனல் -  அவள்  குற்றுயிராகவே தண்ணீர்   கேட்டு  துடித்தாள்.   இராணுவம்  அகன்றதும்  எலடின் அவளுக்கு   தண்ணீர்  கொடுத்தார்.   தனது  காதணிகளை  கழற்றி  தனது   தங்கையிடம்  கொடுக்கச்சொன்னாள்.   அவ்வேளையில்  அவளுக்கு  அவள்  குடும்பத்தின்   மீதே  பிரியம்  இருந்தது.

அவளும்   மற்றவர்களுடன்  காடுகளுக்குள்  மறைந்து தலைமறைவாகியிருந்தால்   சில   வேளை  தப்பியிருக்கவும்  முடியும். சில   வேளை  எதிர்காலத்தில்  கதிர்காமம்  பிரதேசத்தில்  அரசியல் வாதியாகி  பின்னாளில்  பாராளுமன்றமும்  சென்றிருப்பாள்.

குற்றுயிராக   இருந்த  மனம்பேரியை  மற்றும்  ஒருவன் விஜேசூரியாவின்   உத்தரவின்  பேரில்  சுட்டுத்தள்ளினான்.  கதிர்காமம்   சிங்களவர்,   தமிழர்,   இஸ்லாமியர்  வணங்கும்  புனித பூமி.    மனம்பேரியின்  உடலை   அந்த  மண்ணில்  புதைப்பதற்கு இராணுவத்தால்  நிர்ப்பந்திக்கப்பட்டவர்களும்  இந்த  மூவினத்தையும் சேர்ந்தவர்கள்தான்   என  அறிந்தால்  ஆச்சரியப்படுவீர்கள்.

எலடின்   என்ற  சிங்களவர்,   காதர்  என்ற  இஸ்லாமியர்,  பெருமாள் என்ற   தமிழர்.

இன்றும்   முள்ளிவாய்க்கால்  போர்க்குற்றம்  பற்றி   உலகெங்கும் பேசப்படுகிறது.   ஆனால்  1971  இல்    நடந்த  இராணுவ  பொலிஸ் தரப்பு    குற்றங்கள்  பேசப்படவில்லை.   நதிகளில்  மிதந்து  கடலில் சங்கமித்த  சடலங்கள்  குறித்து  குரல்  எழுப்பப்படவில்லை.   பொலிஸ்   நிலையங்களுக்கு  பின்னால்  எரிக்கப்பட்டவர்களின் கதைகள்   மூடிமறைக்கப்பட்டன.

1987 -- 1989   இலும்  இந்தக்காட்சிகளே   தொடர்ந்தது.  மக்கள்  விடுதலை   முன்னணி  பீனிக்ஸ்  பறவை போன்று   உயிர்த்தெழுந்தது. Kangai Makal Book Cover

1971   ஏப்ரில்  கிளர்ச்சியின் பொழுதும்   1987   இலும்  இலங்கை அரசுக்கு   துணைவந்தது  இந்திய  அரசு.  முன்னர்  இந்திராகாந்தியும் பின்னர்  ராஜீவ்  காந்தியும்  பதவியில்  இருந்தார்கள். முள்ளிவாய்க்காலிலும்  போர்  முடிவுக்கு  வந்தபொழுது பக்கத்துணையாக   நின்றதும்  இந்திய  அரசுதான்.

இலங்கையின்   ஆளும்  வர்க்கத்தை   தொடர்ந்து  காப்பாற்றிய பெருமை    இந்தியாவுக்குரியது.

ஆனால்  -  இந்தப்போர்களில்  தமது  இன்னுயிர்களை  நீத்தவர்கள் பலரதும்   அரசியல்  தேவைகளுக்கு  பேசு  பொருளானார்கள்.

ஆம்... மனம்பேரியின்  கொலை  தொடர்பான  விசாரணை   நீதிமன்றம் வந்தபொழுது   அதனைத்தவறாமல்  பார்க்க  வந்தவர்தான்  ரணசிங்க பிரேமதாஸ.

இறுதியில்   அந்த  விசாரணையில்  விஜேசூரியாவும்  சார்ஜன்ட் அமரதாசவும்  தண்டிக்கப்பட்டனர்.   சிறையிலிருந்தபொழுது விஜேசூரியா    சுகவீனமுற்று    இறந்தான்.

சார்ஜன்ட்  அமரதாச  தண்டனைக்காலம்  முடிவுற்று  வெளியே வந்தபின்னர்  1988   இல்   ம.வி.முன்னணியினர் அவனைச்சுட்டுக்கொன்று    பழி    தீர்த்துக்கொண்டனர்.

1977  பொதுத்தேர்தல்   பிரசாரங்களில்  பிரேமதாஸ  மனம்பேரி மகாத்மியம்   பாடிப்பாடியே  ஐக்கிய  தேசியக்கட்சியின்  வாக்கு வங்கியை   பெருக்கினார்.

பேச்சுடன்  நிற்காமல்  பதவிக்கு  வந்ததும்  மனம்பேரிக்கு கதிர்காமத்தில்    நினைவுச்சின்னமும்  அமைத்து  அவளின் குடும்பத்திற்கு   ஒரு  வீடும்  கட்டிக்கொடுத்தார்.

அவள்   கொல்லப்பட்ட  இடத்தைப்பார்ப்பதற்கு  1972  ஏப்ரிலில் சென்றபொMr&Mrs Lionel Bopageழுது   இடத்தை  தேடிக்கண்டுபிடிப்பது  சிரமமாக  இருந்தது. பொது மக்களிடம்   நேரடியாக  கேட்பதற்கும்  தயக்கமாக  இருந்தது. அவ்வேளையில்   கதிர்காமத்தில்  மயான  அமைதி   நிலவியது.  ஒரு சில   பஸ்கள்தான்  சேவையில்   இருந்தன.  தெருவில்  மக்களின் நடமாட்டமும்   குறைவு.  முதல்  நாள்  நடு இரவில்  அந்த பஸ்ஸிலிருந்து  இறங்கியவர்கள்   என்னுடன்  வந்த  எனது உறவினர்கள்   இரண்டுபேரும்  மற்றும்  மூன்று சிங்களப்பயணிகளும்தான்.

அனைவரும்   ஒன்றாக  ஒரு  மடத்தில்  தங்கியிருந்து  மறுநாள் கங்கையில்  நீராடி  தரிசனம்  முடிந்ததும்  புறப்பட்டுவிட்டோம்.   அதன்  பிறகு  அந்தப்பக்கம்  செல்ல  சந்தர்ப்பம்  வரவில்லை.

1977  இல்  விடுதலையான  மக்கள்  விடுதலை  முன்னணி  தோழர்கள் , முதலில்  கதிர்காமம்  சென்று  அந்த  இடத்தை தேடிக்கண்டுபிடித்து   மலர்தூவி  அஞ்சலி  செலுத்தினர்.

தோழர்   லயனல்  போப்பகே  மனம்பேரி  பற்றிய  உருக்கமான பாடலை   எழுதிப்பாடினார்.   இலங்கையின்  பல  பாகங்களிலும் அந்தப்பாடல்   பாடப்பட்டது.   கேட்கும் பொழுது  கண்ணீர்வரும்.

பாடல்  இடம்பெற்ற  விடுதலைக்கீத  மேடைகள்  தோறும்  அவளது படமும்   காண்பிக்கப்படும்.

மனம்பேரி   கொல்லப்பட்டு  இரண்டு  ஆண்டுகளின்  பின்னர்   சிங்கள திரைப்பட  இயக்குநர்  திமோதி  வீரரட்ணவக்கு  பிறந்த  குழந்தை சங்கீதா.   சங்கீதா  வீரரட்ண  பின்னாளில்  சிறந்த  திரைப்பட நடிகையாக  புகழ்பெற்று  பல  விருதுகளும்  பெற்றார்.

சங்கீதா   வீரரட்ண  மனம்பேரியின்  பாத்திரம்  ஏற்று  நடித்த திரைப்படம்    வெளியாகியது.

அன்டன்  ஜோன்ஸ்   என்ற  பிரபல  பாடகரும்  மனம்பேரியை   பற்றிய பாடல்களை   பாடியிருக்கிறார்.   இவரும்  பிரேமதாஸ  பிறந்த கொழும்பு  வாழைத்தோட்டத்தை  ( ஹல்ஸ்டோர்ப்)  சேர்ந்தவரே.

மனம்பேரியின்  கதையை   கங்கை மகள்  என்ற  பெயரில் எழுதியிருக்கின்றேன்.   மாணிக்க கங்கை  பேசுமாப்போன்று  எழுதப்பட்ட  கதை.  அவளின்   நினைவாக  அவள்  கொல்லப்பட்டு சரியாக  31 வருடங்கள்  கழிந்த  நிலையில்,  2002  ஆம்  ஆண்டு ஏப்ரில்    மாதம்  தினக்குரல்  பத்திரிகையில்  கங்கை  மகள் வெளியானது.   அதே  மாதம்  அவுஸ்திரேலியா  உதயம்  இதழிலும் அச்சிறுகதை    வெளியிடப்பட்டது.

2005   இல்  வெளியான  எனது  மற்றும்  ஒரு  கதைத்தொகுதிக்கு கங்கைமகள்   என்றே  பெயரிட்டேன்.   அதற்கு  ஏற்ற  ஓவியத்தை எனக்கு   வரைந்து  தந்தவர்  தமிழ்நாட்டின்  பிரபல  ஓவியர்  மணியன் செல்வன்.    ஆனால் - அவருக்கு  பிரேமாவதி  மனம்பேரி  பற்றி எதுவும் தெரியாது.

நீண்டகாலமாக   மனம்பேரி  எனது  மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.   1990   இல்  ஓவியர்  மணியன் செல்வனை   சந்தித்தபொழுது  தமது  நினைவாக  அவர்  எனக்கு வரைந்துகொடுத்த    ஓவியம்,   கங்கை  மகளுக்கு  பொருத்தமாக இருந்தது.

அதனையே   பின்னர்  கங்கை  மகள்  சிறுகதைத்தொகுப்பு  அட்டையாக பயன்படுத்தினேன்.

மகாபாரத   காவியத்தில்  வரும்  பாஞ்சாலியின்  துகிலை  பலபேர் பார்த்திருக்க    துச்சாதனன்   உரிந்தபொழுது  கிருஷ்ணபரமாத்மா அவள்    மானம்  காத்தார்.    கதிர்காமத்தில்  பிரேமாவதி  மனம்பேரியின்   துகிலை  அந்த  துஷ்டன்  விஜேசூரிய உரியும்பொழுது    கதிர்காமக்கந்தன்  நிஷ்டையில்  இருந்தார்.

ஒன்று   காவியம்.  மற்றது  வரலாறு.

மனம்பேரி  பற்றிய  பல  உண்மைத் தகவல்களை  கொழும்பிலிருந்து வெளியான   சரிநிகர்  வெளியிட்டது.  அதனை  ஒரு  நேரடி  ரிப்போர்ட் என்றும்    சொல்லலாம்.    அதிலிருந்து  கிடைக்கப்பெற்ற  தகவல்கள் எனக்கு    கங்கை  மகளை   எழுதுவதற்கு  உதவியது.

ஆயினும்,  சரிநிகரில்  எழுதியவரின்  பெயர்  என்  நினைவிலிருந்து தப்பிவிட்டது.

-----
தோழர்  லயனல்  போப்பகேயின்  வாழ்வையும்  பணிகளையும் சித்திரிக்கும்   விLionel Bopage Bookரிவான  நூலை Michael Colin Cook  என்பவர் எழுதியிருக்கிறார்.   இந்நூலின்  வெளியீட்டு  அரங்கு  மெல்பனில் நடந்தபொழுது   கலந்துகொண்டேன்.   இந்நூல்  பற்றிய  விமர்சனத்தை பலரும்  எழுதியிருக்கிறார்கள்.

என். சண்முகரத்தினம்   (சமுத்திரன் ) எழுதிய    ஆங்கில  விமர்சனத்தை   கிளிநொச்சியில்    வதியும்  தோழர்  அன்டன்  மாஸ்டர்  சிறப்பாக  மொழிபெயர்த்துள்ளார்.   அவரை  எனக்கு அறிமுகப்படுத்தியவர்   படைப்பாளி  நண்பர்  கருணாகரன்.

-----
இலங்கையில்   நடந்த  உள்நாட்டு  கிளர்ச்சி  மற்றும்  போர்களினால் பயன்கள்  -  பலன்கள்  கிடைத்ததோ  இல்லையோ .... பாடங்கள் வரலாறாகியதுதான்    மிச்சம்.

--------
கதிர்காமத்தில்    மாணிக்க  கங்கை   ஓடிக்கொண்டே  இருக்கிறது.   அந்த  கங்கை  நதியோரத்தில்   பிறந்த    கங்கை   மகள்   பிரேமாவதி மனம்பேரி   இன்றும்    நினைவுகளில்   ஓடிக்கொண்டே    இருக்கிறாள்.
---0---
 

முன்னைய பதிவுகள்

pen-and-mouse

yaarl oli

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள்
துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்

LTTE_Chambers1