|
ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவை ஆதரிக்க தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு விருப்பம்!: ஆனால் 1970 தேர்தல் முடிவை எண்ணி கலக்கம்!!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என, ஐக்கிய தேசியக்கட்சி முடிவு செய்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் உள்ள முக்கியஸ்தர்கள் சிலர் அதற்கு எதிபுப்த் தெரிவித்து, கட்சியிலிருந்து விலகியுள்ளதுடன், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு உழைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இதேபோல, சரத் பொன்சேகாவை ஆதரிக்கப்போவதாக முடிவு செய்துள்ள மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளும் (ஜே.வி.பி) பிளவு தோன்றியுள்ளது. தம்மை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஜே.வி.பி., எவ்வாறு ஒரு இனவாதியும், போர்வெறியனுமான சரத் பொன்சேகாவை, அதுவும் இந்நாட்டு மக்களின் பொது விரோதியான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து ஆதரிக்க முடியும் என, ஜே.வி.பியின் சில உயர்மட்ட தலைவர்களும், பெரும்பாலான கீழ்மட்ட உறுப்பினர்களும் ஆட்சேபனை கிளப்பி வருகின்றனர். இதேபோன்றதொரு நிலைமை, சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ள சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் தோன்றியுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள், கட்சித்தலைமையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முஸ்லீம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் அஷ்ரப் அவர்கள் முன்பொருமுறை கூறிய, ‘தான் உயிரோடு இருக்கும்வரை, ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒருபோதும் உறவு வைக்கமாட்டேன்’ என்ற கூற்றை அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சரத் பொன்சேகா ஒரு பொதுவேட்பாளர் தான் என, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சி ஆதரவாளர்களுக்கு சாக்குப்போக்கு சொன்னாலும், அவரை ஐக்கிய தேசியக்கட்சிதான் களமிறக்கியுள்ளது என்பதை அவ்வாதரவாளர்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் மற்றைய இருவருள் ஒருவரான ‘வாய்ச்சவடால் வீரர்’ மனோகணேசன் எப்பொழுதுமே ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டாலே வெற்றிபெறும் ஒருவர். எனவே அவரது கட்சியையோ, கருத்தையோ ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. மற்றொருவரான மங்கள சமரவீர, பெயர் பலகை கட்சியொன்றை வைத்திருந்தாலும், அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவே பெரும்பாலும் செயற்பட்டு வருகின்றார். அவர் பரிதாபகரமாக தனது அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்தவர் என்பதே, அவர் மீது அனுதாபம் உள்ளவர்களின் பொதுவான கருத்தாகும். ஏனைய சிறுபான்மை இனக்கட்சிகளைப் பொறுத்தவரையில், ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப (நாபா அணி);, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள், தேசிய ஐக்கிய முன்னணி (பேரியல் அஷ்ரப்), தேசிய முஸ்லீம் காங்கிரஸ் (அதாவுல்லா), அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (ரிசாத் பதியுதீன்), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பன உட்பட இன்னும் சில சிறுபான்மை இனக்கட்சிகள் தற்போதைய ஜனாதிபதி மகந்த ராஜபக்சவையே ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கப்போவதாக அறிவித்துவிட்டன. இலங்கை அரசியலில் நீண்டகால அனுபவம்வாய்ந்த திரு வீ.ஆனந்தசங்கரி அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தனது நிலைப்பாடு சம்பந்தமாக இதுவரை பகிரங்க அறிக்கை எதுவும் விடவில்லை. அவர் எவ்வித முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறி நிற்பதுபோலவே தெரியவருகின்றது. இதுவரையில் பகிரங்க அறிவிப்பு எதுவும் விடாவிடினும், ஆனந்தசங்கரி மகிந்த ராஜபக்சவை தான் ஆதரிக்கவே விரும்புகின்றார். ஆனால் தான் அவ்வாறு செய்தால், தன்னை ‘தமிழ் மக்களின் துரோகி’ என தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் என முத்திரை குத்திவிடுவார்கள் என்பதால் தயக்கம் காட்டுகின்றார். அதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என எதிர்பார்த்து ஆனந்தசங்கரி பொறுத்திருப்பதாக, அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் சிலர் கூறுகின்றனர். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, முக்கியமான தமிழ் கட்சியான, தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக என்ன நிலைப்பாடு எடுக்கப்போகின்றது என்பதையே பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் அக்கூட்டமைப்பு புலிகளின் ஒரு பினாமி அமைப்பாக புலிகளாலேயே உருவாக்கப்பட்டு, புலிகள் ஏற்பாடு செய்த கள்ள வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற ஒரு கட்சியாகும். இப்பொழுது புலிகள் உள்நாட்டில் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், ‘அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய்’ மூடை போல அக்கட்சி இருக்கின்றது. அதன் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுடன் தொடர்புகொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் அவர்களது ஆதரவு பெரும்பாலும் ராஜபக்சவுக்கே எனக் கூறப்படுகிறது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் இன்னொருசாரார் சரத் பொன்சேகாவை ஆதரிக்க விரும்புகின்றனர். அவர்களில் மிக முக்கியமானவர், முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பில் இருந்தவரும், அந்த இயக்கத்தின் தலைவர் பத்மநாபாவையும,; ஏனைய முக்கியஸ்தர்களையும் புலிகள் படுகொலை செய்த பின்னர், புலிகளின் பக்கம் சாய்ந்ததுடன், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய கையாளாக செயற்பட்டவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகும். இவர்கள் தவிர புலிகளால் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட (குதிரை) கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன் ஆகியோரும், கே.சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கவே விரும்புகின்றனர். ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரை பொறுத்தவரையிலும் கூட, அவர்களுக்கும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கவே விருப்பம் என்ற போதிலும், தீவிர இனவாதியும், போர்வெறியனுமான (பிரபாகரனையும் ஏனைய புலித்தலைவர்களையும் தானே ஒழித்துக்கட்டியதாக பெருமை பேசும்) சரத் பொன்சேகாவை எப்படி ஆதரிப்பது? ஆதரித்துவிட்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு தமிழ் மக்கள் முன் சென்று வாக்கு கேட்பது என்று தடுமாறி நிற்கின்றனர். அதுவுமல்லாமல், வெளிநாடுகளில் கடந்த பல வருடங்களாக தங்கியிருந்து, புலிகளுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த சில தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டுக்கு திரும்பிவர பயந்தும், வெளிநாடுகளில் தொடர்ந்து தங்க முடியாமலும் தவித்து நின்றனர். இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள சில தமிழ் பிரமுகர்களின் முயற்சியால், அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஒரு முக்கிய அதிகாரியின் ஏற்பாட்டிலேயே நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் தமது ஆசைப்படி செயற்பட முடியாத அபாக்கியவாதிகளாக இருக்கின்றனர். இம்முறை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரையில் முக்கியமான அம்சம் என்னவெனில், ஒருபக்கம் புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் இத்தேர்தல் நடைபெறுகின்றது. மறுபக்கத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில், ஜனாதிபதி தேர்தலில், இனவாதியும், போர்வெறியனுமான சரத் பொன்சேகா போட்டியிடுவதால், பெரும்பாலான தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கும் ஒரே தெரிவே உள்ளது. இதனால் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக்கட்சியும், சரத் பொன்சேகாவை ஆதரிக்க காத்திருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் குழம்பிப்போயுள்ளனர். இந்த நிலைமையை எப்படி மாற்றியமைத்து, தமிழ்பேசும் மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காமல் தடுப்பது என ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலரும் கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளதாகத் தெரியவருகின்றது. அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்குகளை திசைதிருப்பும் வகையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை, ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளராக களமிறக்குவது சம்பந்தமாக, தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. என்ன சுத்துமாத்து முடிவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை எடுத்தாலும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றிலொரு பங்கினர், மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது நிச்சயம் என தெரிய வருகிறது. இவையெல்லாவற்றையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் பரம விரோதியான சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க முற்பட்டால், தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிளவுபடுவதுடன், அதன் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். இதுசம்பந்தமான முன் அனுபவம் ஒன்றையும் சில மூத்த தமிழ் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது 1965ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவில் பிரதான கட்சிகள் (ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி) இரண்டுமே தனியாக அரசாங்கம் அமைக்கும் அளவுக்கு அறுதிப்பெரும்பான்மை பெறத் தவறிவிட்டன. ஐக்கிய தேசியக்கட்சி மிகமோசமான சிங்கள இனவாதிகளான கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜீ.சேனநாயக்க போன்றவர்களின் ஐந்து கட்சிகளைச் சேர்த்து அரசாங்கம் அமைக்க முன்வந்தது. அதேவேளை தமிழரசு, தமிழ்காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே சிறிலங்கா சுதந்திரக்கட்சியால் அரசாங்கம் அமைக்க முடியும் என்ற நிலை இருந்தது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார், இரு தமிழ் கட்சிகளினதும் தலைவர்களை தமக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டார். இந்த சந்தர்ப்பம் தமிழ் மக்களின் நீணடகால பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சில நிபந்தனைகளின் அடிப்படையில் சிறிமாவோவுக்கு ஆதரவு அளித்து, ஒரு வருடம் அவகாசம் கொடுத்துப் பார்த்து, அவர் அதை நிறைவேற்றாமல் விட்டால், ஆதரவை வாபஸ் வாங்கி அவரது ஆட்சியை கவிழ்த்திருக்கலாம். ஆனால் இரு தமிழ் கட்சிகளினதும் தலைவர்கள் செய்தது என்ன? தமது பிற்போக்கு அரசியல் - வர்க்க ஒற்றுமையாலும், சுயநல நோக்கங்களாலும் உந்தப்பட்டு ஐக்கிய தேசியக்கட்சி அரசில் இணைந்து கொண்டனர். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின் அப்போதைய பிரதமர் பிரதமர் டட்லி சேனநாயக்க, மாவட்ட சபைகள் வழங்கலாம் என தமிழரசு கட்சியை நாலரை ஆண்டுகள் ஏமாற்றிவிட்டு, அரசிலிருந்து உதைத்துத் தள்ளிவிட்டார். தமிழரசு – காங்கிரஸ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு இழைத்த இந்தத் துரோகத்துக்கு பதிலடியாக, அக்கட்சிகளுக்கு அடுத்த தேர்தலில் தமிழ்மக்கள் பாடம் புகட்டத் தவறவில்லை. அடுத்து 1970ல் நடந்த பொதுத்தேர்தலில் தமிழரசு – காங்கிரஸ் முக்கிய தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் ஆகியோரை மக்கள் தேர்தலில் தோற்கடித்து நல்ல பாடம் புகட்டினர். அதுமாத்திரமின்றி, தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்று, அமோக வெற்றியும் ஈட்டியது. இந்த சந்தர்ப்பத்தில் தான் 1970 ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியானதும், தாம் செய்த முட்டாள்தனத்தை எண்ணி, ‘கடவுள்தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும்’ என தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கடவுளின் மேல் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டார். (பின்னர் 1976ல் தமிழ் மக்களுக்கு ‘தனித்தமிழீழம் தான் தீர்வு’ என இன்னொரு முட்டாள்தனமான முடிவை, வட்டுக்கோட்டையில் மாநாடு கூட்டி எடுத்து, தமிழ் மக்களுக்கு பேரழிவை கொண்டுவந்தது இன்னொரு வரலாறு). இத்தகைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து, மீண்டும் ஒரு வரலாற்று தவறை இழைத்து, அடுத்த பொதுத்தேர்தலில் 1970ல் பெற்றது போன்ற படுதோல்வியைப் பெறுவதைவிட, புத்திசாதுரியாகவும், தூரதிருஷ்டியுடனும் முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பதே, தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலரின் விருப்பமாகும். அப்படிப் பார்க்கும் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னால் இரண்டு தெரிவுகளே உள்ளன. ஒன்று இனப்பிரச்சினைக்கு ஓரளவாவது நியாயமான தீர்வைக்காணக்கூடிய மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பது அல்லது தமிழ் மக்கள் தமது விருப்பப்படி வாக்களிக்கும்படி அறிவித்துவிட்டு, ஜனாதிபதி தேர்தல் விவகாரங்களிலிருந்தும், தமிழர் அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்வது. இதில் ஏதாவது ஒரு முடிவை, தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைவில் எடுத்தேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
|