|
தமிழர்களின் வாக்குகளுக்குள் மறைந்துகொள்ள முயற்சிக்கிறார் ரவூப் ஹக்கீம்
- அமைச்சர் அதாவுல்லாவுடன் ஒரு நேர்காணல்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் மக்களின் வாக்குகளில் மறைவதற்கு முனைகிறார். அவர் கூறுவதில் எதுவித உண்மையுமில்லை.
பெரும்பான்மையான முஸ்லிம் வாக்காளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களித்துள்ளார்கள் என தேசிய நீர் வழங்கல் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 1,10,500 முஸ்லிம் வாக்குகளும் திருகோணமலையில் 79 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 54,600 முஸ்லிம் வாக்குகளுமாக மொத்தமாக 2,16,100 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றில் அம்பாறை மாவட்டத்தில் 55,000 முஸ்லிம் வாக்குகளும், மட்டக்களப்பில் 30,000 முஸ்லிம் வாக்குகளும், திருகோணமலையில் 36,000 முஸ்லிம் வாக்குகளுமாக மொத்தமாக 1,21,000 வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வாக்காளர்கள், முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்கள் சரத் பொன்சேகாவிற்கு 95,100 வாக்குகளே கிடைத்திருக்கின்றன.
பெரும்பாலான தமிழ்ப் பிரிவுகளிலுள்ள வாக்குச் சாவடிகளில் அளிக்கப்பட்டிருந்த வாக்குகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் சம்மாந்துறை தொகுதியில் சரத் பொன்சேகாவிற்கு 27 ஆயிரம் வாக்குகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 20 ஆயிரம் வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. இதில் தமிழ் மக்கள் அளித்த ஏழாயிரம் வாக்குகளினாலேயே சரத் வெற்றி பெற்றிருக்கிறார்.
பொத்துவில் தொகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 9 ஆயிரம் சிங்கள வாக்காளர்களும் 3 ஆயிரம் தமிழ் வாக்காளர்களும் முஸ்லிம் பகுதிகளிலிருந்து 21 ஆயிரம் வாக்குகளுமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்திருக்கிறது.
பொன்சேகா பெற்றுக்கொண்ட 54 ஆயிரம் வாக்குகளில் 24 ஆயிரம் தமிழ் வாக்காளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவையாகும். எனவே தமிழ் மக்களின் மேலதிக வாக்குகளின் மூலமே பொன்சேகா குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார். கல்முனை தொகுதியைப் பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ¤க்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் பாரம்பரிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. நாம் 40 வீதமான வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொடுத்திருந்தாலும் கூட வெற்றிதான். ஆனால் நாம் 50 வீத வாக்குகளை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப காலங்களில் 90 வீதமாக இருந்த முஸலிம் காங்கிரஸின் வாக்குகள் தற்போது 45 வீதமாக குறைவடைந்திருக்கிறது.
சரத் பொன்சேகாவை வெல்ல வைக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் தேர்தல் வியூகங்கள், பிரசாரங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தளம் படிப்படியாக மறைந்து வருகிறது.
வடக்கு கிழக்குக்கு வெளியே தனித்து நின்று போட்டியிட்ட அக்கட்சியானது அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட எதிர்க்கட்சி ஆசனங்களில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. குறுகிய காலத்திற்குள் தேசிய காங்கிரஸ் பெரு வளர்ச்சி கண்டிருக்கிறது.
கடந்த காலத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் முஸ்லிம் காங்கிரஸ் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளுக்குள் மறைந்துகொள்ள முயற்சிக்கிறது. கிழக்கைப் பொறுத்தவரையில் சுமார் 95 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை ரவூப் ஹக்கீம் மீண்டும் ஏமாற்றியிருக்கிறார்.
ஆனால் நாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியூடாக கிழக்கு மாகாண மக்களைக் காப்பாற்றியிருக்கிறோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உறவுகளை பாதுகாத்திருக்கிறோம்.
சரத் வெல்லப் போகிறார். நாங்கள் அமைச்சுப் பொறுப்புக்களை எடுக்கப் போகிறோம், அதிகாரம் எமது கைக்கு வந்துவிடும், ஒலுவில் துறைமுகத்தை எமது கைக்கு எடுத்துக்கொண்டு வேலை வாய்ப்புக்களையெல்லாம் பெற்றுக் கொடுப்போம் என கொடுத்த ஈனக்குரலுக்கு கொடுத்த வாக்குகளே அவை.
பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்கள் மத்தியில் ஒரு மாயை ஏற்படுத்தினர். தோற்பவர் எந்த வாக்குறுதிகளையும் அளிக்கலாம். வடக்கு கிழக்கு இணைப்பு தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்டதன் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டிரு க்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகப்படுத் தப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் சிறுபான்மை மக்களின் வாக்குகளே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. சம்பந்தன், ரவூப் ஹக்கீம், ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் 80 வீதமான சிங்கள மக்களை ஒற்றுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
சிறுபான்மை மக்களில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லாத நிலை இப்போது உருவாகியிருக்கிறது. சிறுபான்மை கட்சிகள் அரசியல் பேரம் பேசும் சக்தியை இந்தத் தலைவர்கள் இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்திற்கு பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவைக் கொண்டு வந்தது நானே. முஸ்லிம் காங்கிரஸிற்கு இதுவே இறுதி வாய்ப்பாகும். இச் சந்தர்ப்பத்திலாவது எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என ரவூப் ஹக்கீம் கூறியதை நம்பிய வாக்காளர்கள் ஜனாதிபதி மஹிந்தவின் அமோக வெற்றியின் பின்னர் உண்மை நிலையை உணர்ந்திருக்கிறார்கள்.
இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலும் கூட ரவூப் ஹக்கீம் தோல்வியடைந்திருக்கிறார். முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்களும், தடுமாற்றத்தில் இருந்த அலை வாக்காளர்களும் இனி ஆகப் போவது எதுவுமில்லை என்பதை உணர்ந்து தற்போது எம்முடன் இணைந்து கொண்டிருக்கிறார்கள். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தேசிய காங்கிரஸ் வெற்றி பெறுவதுடன் முஸ்லிம் காங்கிரஸ் அதன் அரசியல் தளத்தை முற்றாக இழப்பது உறுதியாகிவிட்டது.
கிழக்கில் குறுகிய காலத்திற்குள் தேசிய காங்கிரஸ் பாரிய வளர்ச்சி கண்டிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட பலர் எம்முடன் இணைந்து கொண்டிருக்கிறார்கள். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அம்பாறை நாமல் ஓயா பிரதேச சபைத் தலைவர் உட்பட 14 பிரதேச சபை உறுப்பினர்கள் தேசிய 8!சீகிரஸில் இருந்து மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸ¤ம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க சிறுபான்மை மக்கள் வாக்களித்ததன் மூலம் சிறுபான்மையினர் ஒற்றுமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என சம்பந்தன், ஹக்கீம் இருவரும் தெரிவித்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் வாக்குகளே அதிகளவில் சரத் பொன்சேகாவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் யுத்தத்தின் பாதிப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்திருக்கலாம்.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுக்கொண்டதற்காக பொன்சேகாவை ஆதரித்தார்கள் எனக் கூறுவதில் எதுவித உண்மையும் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளுக்குள் மறைய முயலும் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அந்த வாக்குக ளுக்குள் மறைந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயல்கிறார். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மு. காங்கிரஸ் போட்டியிடுவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
வட கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மாகாண மக்களுக்குச் செய்யும் பெரிய துரோகமாகும். மக்களின் விருப்புகளுக்கு அப்பால் கள்ளத்தனமாகவே இந்த இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டன. இதனால்தான் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே பிரிவுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டன. புலிகளின் பேச்சாளராக செயற்பட்ட சம்பந்தனும், ரவூப் ஹக்கீமும் வடகிழக்கு இணைந்திருப்பதற்கு ஆதரவு தெரிவித்தே சரத் பொன்சேகாவை ஆதரித்தார்கள். கிழக்கு மக்கள் கிழக்கு பிரிந் திருப்பதையே விரும்புகிறார்கள். அதன் மூலம் இரண்டு மாகாண மக்களுக்கும் அதிக நன்மை களைப் பெறக்கூடியதாக இருக்கிறது. கிழக்கு மாகாணம் தனியொரு மாகாணமாக இருப்பதையே தேசிய காங்கிரஸ¤ம் விரும்புகிறது.
முப்பது ஆண்டுகளுக்குப் பின் மூவின மக்களும் ஒன்றிணைந்து நிம்மதியாக வாழும் சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. ரணில், ஹக்கீம், மனோ கணேசன், சம்பந்தன் ஆகியோர் வெளிச்சக்திகளுடன் இணைந்து அதனை இல்லாமல் செய்வதற்கு எடுத்த முயற்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் தோல்வியில் முடிந்துள்ளதாக அமைச்சர் அதாவுல்லா மேலும் தெரிவித்துள்ளார்.
|