|
ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முடிவு நெருங்குகின்றது!!
வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல், ஒரு வகையில் 1970ம் ஆண்டுப் பொதுத் தேர்தலை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறது. அந்தத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி – லங்கா சமசமாஜக் கட்சிகளின் ‘மக்கள் கூட்டணி’, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது. இப்பொழுது நடந்து முடிந்துள்ள தேர்தலிலும், மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகளையும், அவர் தென்னிலங்கையில் வெற்றி பெற்ற தொகுதிகளையும் எடுத்து நோக்கினால், ஜனாதிபதி தேர்தலுக்குப் பதிலாக பொதுத் தேர்தல் நடந்திருந்தால் மூன்றில் இரண்டு என்ன, ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்றே, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியைப் பிடித்திருக்கும் என்பது தெளிவாகின்றது.
வாக்குகளின் பெரும்பான்மையை விட, முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் இருக்கின்றது. அதாவது 1970ம் ஆண்டுப் பொதுத் தோதலின் போதும், இப்பொழுது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலின் போதும் நிலவிய அரசியல் சூழலின் ஒத்த தன்மையே அது. 1970ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், சுமார் நாலரை ஆண்டுகள் தமிழரசுக் கட்சி, டட்லி சேனநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின், ஏழு கட்சி கூட்டரசாங்கத்தில் ஒரு பங்காளியாக இருந்தது. அதேபோல, இன்னொரு பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழ் காங்கிரஸ் கட்சி, அந்த ஆட்சியின் முழுக் காலமும், அதாவது ஐந்து வருடங்கள் ஆட்சியின் பங்காளியாக இருந்தது.
இந்த இரு தமிழ் கட்சிகளும், ஐ.தே.க அரசாங்கத்தில் பங்காளிகளான விடயம், சுவாரசியமான ஒரு சமாச்சாரமாகும். அதே வேளையில் அது, இந்த இரு தமிழ் கட்சிகளினதும் பிற்போக்கு வர்க்க – அரசியல் தன்மையை புட்டு வைத்த விடமுமாகும். 1965ல் நடந்த பொதுத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட்ட, தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட, ஐ.தே.கவுக்கு சற்று அதிகமான ஆசனங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலைமையில் பிரதான கட்சிகள் இரண்டும் ஆட்சி அமைப்பதற்கு தத்தமக்கு ஆதரவு வழங்கும் படி, தமிழ் கட்சிகளை, குறிப்பாக வடக்கு கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்ற தமிழரசுக்கட்சியை வேண்டி நின்றன.
ஐ.தே.கவைப் பொறுத்தவரை, அது ஏற்கெனவே தீவிர சிங்கள இனவாதிகளான கே.எம்.பி ராஜரத்ன, ஆர்.ஜீ.சேனநாயக்க ஆகியோரின் கட்சிகள் உட்பட நான்கு கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தபடியால், தமிழ் கட்சிகளின் ஆதரவு இல்லாவிடினும், ஒரு சிறிய பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கக் கூடிய நிலையில் இருந்தது.
ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், தமிழ் கட்சிகள் ஆதரித்தால் மட்டுமே, ஆட்சியமைக்கக் கூடிய நிலையில் இருந்தது. அந்தச் சூழ்நிலை தமிழ் கட்சிகளுக்கு ஒரு பெரும் வாய்ப்பாகவும் இருந்தது. குறிப்பாக, தமிழரசுக்கட்சியின் தந்திரோபாய நடவடிக்கைக்கு ஒரு அரிய சந்தர்ப்பமாக இருந்தது. அதாவது தென்னிலங்கையின் பிரதான கட்சிகளுக்கு தேர்தலிகளில் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் போகும் போது, அவை ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவதானால், தமிழ் மக்கள் சார்பாக தாம் முன் வைக்கும் கோரிக்கைகளை ஏற்க வேண்டுமென நிபந்தனை விதித்து, பேரம் பேசுவதன் மூலம், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தமது தந்திரோபாயம் என தமிழரசுக் கட்சியினர் கூறி வந்தனர். எனவே தாம் ஆதரித்தால் மட்டுமே ஆட்சியமைக்கக் கூடிய நிலையில் இருந்த, சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேரம் பேசக்கூடிய ஒரு சுசூழ்நிலை உருவாகி இருந்தது. தமிழரசுக்கட்சியின் கோரிக்கைகளை சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் நிறைவேற்றாது தட்டிக் கழிக்குமாக இருந்தால், அரசிலிருந்து வெளியேறி, அரசைக் கவிழ்த்துவிடக்கூடிய வாய்ப்பும் அக்கட்சிக்கு இருந்தது.
இந்த அருமையான வாய்ப்பை தமிழரசுக்கட்சியினர் பயன்படுத்தினார்களா என்றால் அதுதான் இல்லை! அவர்களும், ஏற்கெனவே ஐ.தே.கவின் ‘தமிழ்ப் பதிப்பு’ என பிரசித்தி பெற்றிருந்த தமிழ் காங்கிரசும், வலிந்து சென்று, ஐ.தே.க அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர். ஐ.தே.க அரசுடன் இணையக் காரணம், அவ்வரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட சபைகளை அமைப்பதற்கு, தமிழரசுக்கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் டட்லியின் அரசாங்கம், கடைசிவரை மாவட்ட சபைகளை அமைக்காமல் தமிழரசுக்கட்சியை ஏமாற்றிவிட்டது. (தற்செயலாக தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால், அவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் கம்பனியை இவ்வாறு தான் ஏமாற்றியிருப்பார் என்பதில், எள்ளளவும் சந்தேகம் இல்லை) எனவே தமிழரசும், தமிழ் காங்கிரசும் ஐ.தே.க அரசில் இணைந்தது, தமது சொந்த நலன்களையும், வர்க்க நலன்களையும் காப்பதற்குத்தான் என்பது நிரூபணமானது. நான்கரை ஆண்டுகள் ஐ.தே.க ஆட்சியில் பங்காளியாக இருந்து, அவ்வரசு எடுத்த சகல மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய தமிழரசுக்கட்சி, மாவட்ட சபைகளைப் பெறமுடியாத சூழலில், வெட்கக் கேடான முறையில் ஆட்சியை விட்டு வெளியேறியது. ஆனால் ஐ.தே.க அரசு செய்த துரோகம் பற்றி வாய் திறக்காத தமிழரசுக்கட்சி, திரிகோணமலையை புனித நகராக்கும்படி தாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத படியால் தான், தாம் அரசிலிருந்து வெளியேறியதாக ஒரு நொண்டிச்சாட்டை தெரிவித்தது. அவர்கள் தமது வர்க்க சகாவான ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே அவ்வரசில் இணைந்து கொண்டார்கள் என்பதை, சிங்கள மக்கள் மாத்திரமின்றி, தமிழ் மக்களும் புரிந்து கொண்டார்கள் என்பதை, பின்னர் 1970ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டிவிட்டன. தமிழ் கட்சிகள் இரண்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு அளிக்காமல், பிற்போக்கு ஐ.தே.கவுக்கு ஆதரவு அளித்ததினால் ஆத்திரமடைந்த சிங்கள மக்கள், 1970ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கவைத் தோற்கடித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ‘மக்கள் கூட்டணி’யை அமோக வெற்றிபெற வைத்தனர். அதேபோல, தமிழ் பகுதிகளில் தமிழ் கட்சிகளின் முக்கிய தலைவர்களான அ.அமிர்தலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.சிவசிதம்பரம், ஈ.எம்.வி. நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் ஆகியோரைத் தமிழ் மக்கள் தோற்கடித்து, தமிழ் தலைவர்களின் ஐ.தே.க சார்புப் போக்குக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதாவது, அந்தத் தேர்தலில், சிங்கள மக்களும், தமிழ் மக்களும் இணைந்து, ஏகோபித்த முறையில், தமிழ் தலைமைகளின் போக்கிற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அந்த நிலைமையை இன்றைய ஜனாதிபதி தேர்தல் முடிவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், 1970 தேர்தல் காலத்தில் நிலவியது போன்ற ஒரு சூழ்நிலையே, தற்போதைய ஜனாதிபதி தேர்தலின் போதும் இருந்துள்ளதை அவதானிக் முடிகின்றது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரண்டு மூன்று தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார். அப்போது அவர், தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும், தேசிய இனப் பிரச்சினைக்கும், தான் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவானதும், நிச்சயம் தீர்வு காண்பதாகவும், எனவே ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறும் வேண்டிக் கொண்டார் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மகிந்தவின் வேண்டுகோளை திமிர்த்தனமாக நிராகரித்தது. அவருக்கு ஆதரவு வழங்குவதைத் தவிர்ப்பதற்காக, அவரால் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைத்தது. அதாவது சட்ட அடிப்படையில் நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்ட, வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பை ரத்துச் செய்யும்படி கூட்டமைப்பினர் கோரினர். அத்துடன் உயர் பாதுகாப்புப் பிரதேசங்களை நீக்குதல், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், கைது செய்யப்பட்ட அல்லது சரண் அடைந்த புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல், இடம் பெயர்;ந்த மக்களை மீளக் குடியமர்த்தல் என்பனவற்றை, தேர்தலுக்கு முன்னர் உடனடியாகச் செய்ய வேண்டுமெனக் கோரினர். (அதே வேளையில் வடக்கு கிழக்கு இணைப்பை நீக்கும்படி வழக்குத் தொடர்ந்து, அதில் வெற்றியும் ஈட்டிய, இனவாத ஜே.வி.பியுடன் இணைந்து தான் பொன்சேகாவை ஆதரித்தனர்!) நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட, படிப்படியாக செய்யப்பட வேண்டிய இந்த விடயங்களை, அந்தரங்க நோக்கத்துடன் உடனடியாகச் செய்ய வேண்டுமென நிபந்தனை விதித்தனர். இவற்றை மகிந்த ராஜபக்ச உடனடியாகச் செய்திருந்தால், புலிப் பயங்கரவாதத்தை பாரிய சிரமப்பட்டு ஒழித்துக் கட்டியதில் அர்த்தம் இல்லாமல் போவதுடன், மக்களின் ஆதரவை இழந்து, தேர்தல் முடிவும் அவருக்குப் பாதகமாகவே போயிருக்கும். (சில வேளைகளில், மகிந்தவை கொண்டு இவற்றைச் செய்ய வைத்து, அதன் மூலம் அவரை ஜனாதிபதி தேர்தலில் மண் கவ்வ வைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டனரோ தெரியவில்லை! உண்மை அதுவாக இருக்குமானால், கூட்டமைப்பினர் மகிந்தவை ஆதரிக்காமல, பொன்சேகாவை ஆதரித்ததிற்காக அவர்களுக்கு ஒரு சபாஸ் போடத்தான் வேண்டும்!!)
இருந்தும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், அரசாங்கம் அநேகமான இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர வைத்ததுடன், உயர் பாதுகாப்பு வலயங்கள் சிலவற்றையும் நீக்கி, புலிச் சந்தேக நபர்கள் சிலரையும் விடுதலை செய்தது. (அது மாத்திரமின்றி, தமிழ் மக்களின் ஆதரவு இன்றி மகிந்த ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருந்த போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, அவர் வெற்றி பெற்ற பின்னர் அறிவித்துள்ளது, தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாமாகும். அத்துடன் அவசர காலச் சட்டம் படிப்படியாக நீக்கப்படும் எனவும், பாராளுமன்றத் தேர்தலின் பின் அரசியலமைப்பு மாற்றப்படும் எனவும் கூட மகிந்த அறிவித்துள்ளார்) ஆனால் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை உதாசீனம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பகிரங்கமாக நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததுடன், புலிகளை ஒழித்துக் கட்டும் சாக்கில் பல்லாயிரக்கணக்கான சாதாரண தமிழ் மக்களையும் கொலை செய்த, சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்தது. பொன்சேகாவின் பேரினவாத, போர்வெறிப் போக்கு இத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. போர் முடிந்த பின்னரும் கூட, இராணுவத்துக்கு ஒரு லட்சம் பேரைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியவர் அவர். விடுவிக்கப்பட்ட வன்னி பகுதிகளில் தமிழ் மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் (சிங்கள) இராணுவக் குடியேற்றங்களைச் செய்ய வேண்டுமென வலியுறுத்தியவர். இடம் பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்தக் கூடாது எனவும் கூறியவர். கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த புலி உறுப்பினர்களை பல வருடங்களுக்கு தடுப்பு முகாம்களில் வைத்திருக்க வேண்டுமெனவும் அரசுக்கு ஆலோசனை வழங்கியவர்.
இவ்வளவு மோசமான தமிழ் இன விரோதியும், ஜனநாயக விரோதியுமான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவின் காரணமாகவே, ஆத்திரமடைந்த சிங்கள மக்கள், மகிந்த ராஜபக்சவுக்கு இம்முறை தமது அமோக ஆதரவை வழங்கி, அவரைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வைத்தனர். இந்த நடவடிக்கை 1970 பொதுத் தேர்தலில், ‘மக்கள் கூட்டமைப்பு’க்கு அன்று சிங்கள மக்கள் வழங்கிய அமோக ஆதரவுக்கு ஒப்பானது அல்லது அதனிலும் கூடியது எனலாம். அதேபோல தமிழ் கூட்டமைப்பின் இந்த முடிவு, தமிழ் மக்களை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வது மட்டுமல்ல, அது கூட்டமைப்பின் சொந்த அழிவுக்கும் எதிர்காலத்தில் வழி சமைக்கப் போகும் ஒன்றாகும். எப்படி அன்றைய தமிழரசு – தமிழ் காங்கிரஸ் தலைமைகளை, 1970 பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் மிக மோசமாகத் தோற்கடித்தார்களோ, அது போல விரைவில் வரப்போகின்ற பொதுத் தேர்தலிலும், தமிழ் மக்கள் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் காட்சியை நாம் காணத்தான் போகின்றோம்! நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு, மகிந்தவிலும் பார்க்க கூடுதலான வாக்கை அளித்திருக்கின்றனர் என்பது உண்மையே. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று நடந்து முடிந்த யுத்தத்தில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும், அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தத் தவறியதுமாகும். மற்றது சரத் பொன்சேகா நிச்சயம் அமோக வெற்றி பெறுவார் என, உள்நாட்டு - வெளிநாட்டு பிற்போக்கு ஊடகங்கள் செய்து வந்த பிரச்சாரமாகும். அத்துடன் அவர் வழங்கிய ஏமாற்றுத்தனமான பொய் வாக்குறுதிகளை நம்பிய தமிழ் மக்கள், அரசியலுக்குப் புதியவரான அவர் ஏதாவது நல்லதைச் செய்வார் என நம்பியதுமாகும். எனவே தான் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கு கூடுதலான வாக்குகளை அளித்தனர். ஆனால் இதன் அர்த்தம், தமிழ் தேசியக் கூட்டமைப்பை அவர்கள் ஆதரிக்கிறாhகள் என்பதல்ல. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு; அளித்த வாக்குகளை எடுத்து நோக்குகையில், அவர்கள் தமிழ் கூட்டமைப்பை நிராகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. எனவே இதன் பெறுபேறுகளை, அடுத்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிச்சயம் அறுவடை செய்யத்தான் போகிறார்கள். அவர்களது வழமையான தில்லுமுல்லுகள் எதுவும் இனிமேல் எடுபடப் போவதில்லை. அவர்கள் 1970 பொதுத் தேர்தலின் போது எதிர்நோக்கியது போன்றதொரு, பாரிய பின்னடைவுக்கான அரசியல் சூழ்நிலைகள் இப்பொழுதும் காணப்படுகின்றன. ஆனால் 1970 தேர்தலின் போது படுதோல்வியடைந்த பின்னர், மிகவம் மலினமான முறையில் ‘தமிழீழ’ தீர்மானத்தை முன்வைத்து, 1977 பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது போல, இனிமேல் அவர்களால் செய்துவிட முடியாது. ஏனெனில் தேர்தல் வெற்றிக்காக அன்று அவர்கள் எடுத்த தமிழீழ தீர்மானம், பின்னர் தமிழ் மக்களின் வாழ்வில் எத்தகைய பாரிய அழிவுகளைக் கொண்டு வந்தது என்பதை தமிழ் மக்கள் அவ்வளவு லேசில் மறந்துவிட மாட்டார்கள். அதே நேரத்தில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் இன்னொரு உண்மையையும் புட்டு வைத்துள்ளன. அதாவது வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் வாழ்கின்ற தமிழ் மக்கள், அரசாங்கத்தை ஆதரிக்கின்ற தமிழ் கட்சிகளின் வேண்டுகோளுக்கும் பெரிதாகச் செவிசாய்க்கவில்லை என்பதே அதுவாகும். இதைச் சொல்வதில் வெட்கமோ, தயக்கமோ அக்கட்சிகள் அடையத் தேவையில்லை. ஒருவரது உடம்பில் வருத்தம் இருக்கின்றது என்றால், முதலில் அவர் அதை புரிந்து ஏற்க வேண்டும். அவ்வாறு ஏற்றால் தான், பின்னர் அதற்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம். அரசாங்கம் போதிய வேலைகளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்யாததும், அங்குள்ள அரச சார்பு தமிழ் கட்சிகளின் வேண்டுகோளுக்கு மக்கள் செவிசாய்க்காததிற்கு ஒரு காரணம் என்றாலும், அந்த கட்சிகள் ஒரு அணியாக ஒற்றுமைப்பட்டு நிற்காததும், ஒரு பிரதான காரணம் என்பதை உணர வேண்டும். அந்த ஒற்றுமையை அவர்கள் ஏற்படுத்தாத வரை அங்கு வாழ்கின்ற மக்கள் அவர்களுக்குப் பின்னால் செல்லப் போவதுமில்லை அவர்களது சொல்லைக் கேட்கப் போவதுமில்லை என்ற உண்மையை அக்கட்சிகள் உணர வேண்டும். புலிகளுக்கு எதிரான, ஜனநாயகப் போக்குள்ள, வடக்கு கிழக்கின் தமிழ் கட்சிகளுக்கிடையே, ஓரு ஒற்றுமையை ஏற்படுத்த, கடந்த பொதுத் தேர்தலின் போதே, சில முற்போக்கு சக்திகள் முயற்சி எடுத்த போதிலும், இக்கட்சிகளின் குறுகிய சுயநலப் போக்குகள் காரணமாக அது கைகூடாமல் போனது வருத்தத்துக்குரியதும், அவர்களதும் தமிழ் மக்களினதும் துரதிஸ்டம் என்றும் சொல்ல வேண்டும். இனிமேலும் அவ்வாறான ஒரு நிலை வராமல் பார்த்துக் கொள்வது அவர்களது கடமையாகும். மக்கள் நலனில் இக்கட்சிகளுக்கு உண்மையான அக்கறை இருக்குமாக இருந்தால், விரைவில் நடைபெறப் போகும் பொதுத் தேர்தலுக்கு முன்பாவது இக்கட்சிகள் நிச்சயமாக ஒன்றுபட வேண்டும். அவர்கள் ஒன்றுபடாவிட்டால், தமிழ் மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் அற்ப சொற்ப ஆதரவும் இல்லாமல் போகும் ஆபத்து உள்ளதை, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த விடயத்தில் ஒரு சிறிய நம்பிக்கை ஒளி பிறந்துள்ளதையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது அவசியமாகும். ஜனாதிபதி தேர்தலின் போது, சில இடதுசாரி – ஜனநாயக கட்சிகள், அதாவது கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) என்பன இணைந்து செயல்பட்டதுடன், அவற்றுடன் வடக்கில் நடந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது ஈ.பி.டி.பியும் இணைந்து கொண்டது நல்லதொரு திருப்பமாகும். இந்த ஆறு கட்சிகளும், முடியுமானால் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியையும் இணைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒரே அணியாக, ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிடியிலிருந்து தமிழ் மக்களை நிச்சயம் விடுவிக்க முடியும். அது பற்றி சம்பந்தப்பட்ட கட்சிகள் விரைவில் கூடிப்பேசி முடிவெடுப்பது அவசியம். அதேபோல கிழக்கில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளும், சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்திருக்கும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனும், சில முஸ்லீம் கட்சிகளும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயல்பட்டது நல்லதொரு நிலைமையாகும். இந்த நிலைமையையும் மேலும் வளர்த்து, அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்மையும், ஐ.தே.கவின் மிச்ச சொச்சங்களையும், அப்பிரதேசத்திலிருந்து துடைத்தெறிவது அவசியமாகும். இதே போன்றதொரு நிலைமை மலையகத்திலும் செய்யப்பட வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் - முஸ்லீம் மக்களை வென்றெடுத்து அவர்களை பிற்போக்கு தேசியவாதத்திலிருந்தும், வலதுசாரி ஐ.தே.க ஆதரவு நிலையிலிருந்தும் விடுவித்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு, முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் பக்கம் கொண்டு வருவது, சகல முற்போக்கு சக்திகளினதும் தவிர்க்கவியலாத இன்றைய கடமையாகும்.
|
|